சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதர் பரிந்துரை

புதுடெல்லி: ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து முனீஸ்வர் நாத் பண்டாரி கடந்த 12ம் தேதி ஓய்வுபெற்றார். இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்றார். அவர் கடந்த 21ம் தேதி ஓய்வுபெற்றார். இதைத்தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பதவியேற்றார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய கொலீஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க நேற்று முன்தினம் கூடியது. இக்கூட்டத்தில் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.முரளிதரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தவுடன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதர் பதவியேற்பார்.

நீதிபதி முரளிதர், கடந்த 2006ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2020ம் ஆண்டு மார்ச்சில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு முதல்  ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதர் பதவி வகித்து வருகிறார்.  டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதவி வகித்தபோது பல முக்கிய வழக்குகளை விசாரித்துள்ளார். டெல்லி கலவர வழக்கில் ஒன்றிய அரசுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: