கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு இந்தியர்களை கடத்தி சித்ரவதை; பிணை கைதிகள்

* 20 மணி நேரம் பணி, சட்டவிரோத வேலை, பாலியல் தொழில், தீவிரவாத செயல்

* நிபந்தனைக்கு கட்டுப்படாதவர்களை சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டல்  

* மியான்மரில் சிக்கிய 300 பேரின் கதி என்ன? மீட்பது சிரமம் என ஒன்றிய அரசு கைவிரிப்பா?

‘ஏய்  எங்கப்பா துபாய்ல வேலை செய்றாறு... என் கணவன் பாரீன்ல இருக்காரு...’.  இதேபோல், தங்களது உடன் பிறந்த சகோதரர், சகோதரிகள் மற்றும் குடும்ப  உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வேலை செய்வதை பெருமையாகவும், கெத்தாகவும்  சொல்லி கொள்ளும் குடும்பத்தினர், அவர்கள் அங்கு அனுபவிக்கும்  சித்ரவதையை அறிவதில்லை. இந்தியாவில் இருந்து புறப்படும் போது இருக்கும்  உற்சாகம், வெகு காலம் நீடிப்பதில்லை. வெளிநாடுகளுக்கு சென்ற பின், அவர்கள்  அனுபவிக்கும் கஷ்டங்கள், சித்ரவதைகளை குடும்பத்தினரிடம் சொன்னால், அவர்கள்  கண்ணீர் விடுவார்கள் என்பதால் குடும்ப சூழலை கருதி, ‘சொல்லவும் முடியாமல்,  முழுங்கவும் முடியாமல்’ வாய்க்கு பூட்டு போட்டு, தலையாட்டி பொம்மை போல் வேலை  செய்து வருகின்றனர்.

கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் போலி வேலைவாய்ப்பு  நிறுவனங்களால் அனுப்பப்படும் இந்தியர்களை, தூதரகம் மூலமாக கூட மீட்க  முடியவதில்லை என்பது வேதனையிலும் வேதனை. இதற்கு சிறந்த உதாரணம்தான்  மியான்மர் நாட்டில் சிக்கி உள்ள இந்தியர்கள். இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 135 கோடி. நம் நாட்டில் உள்ள கல்வி தரத்தால் உலகம் முழுவதும் இன்று லட்சக்கணக்கான சாப்ட்வேர் இன்ஜினியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு துறைகளில் இந்தியர்கள் ஜொலித்து வருகின்றனர். இன்று உலகமே வியக்கும் வகையில் கூகுள் நிறுவனம் முதல் உலகின் முன்னணி நிறுவனங்கள் தலைமை பொறுப்பை அலங்கரித்துள்ளது இந்தியர்களே. ஆனால், இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலையின்மை காரணமாக லட்சக்கணக்கான பட்டதாரிகள், கையில் சான்றிதழ்களுடன் ஏறாத நிறுவனங்களே இல்லை.

போதாகுறைக்கு கொரோனா தொழில்துறையை சின்னாபின்னமாக்கிவிட்டது. இதனால், வேலையில் இருந்தவர்களும் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். குடும்ப சூழல், வேலையின்மை, குறைந்த சம்பளம் போன்ற பல்வேறு நெருக்கடிகளால், வெளிநாடுகளில் வீட்டு வேலை, குழந்தை பராமரித்தல், டிரைவர், தூய்மை பணியாளர் முதல் ஐடி பணி வரை லட்சக்கணக்கான இந்தியர்கள் சென்றுள்ளனர். அவ்வாறு சென்று உள்ள இந்தியர்களுக்கு 20 மணி நேரம் பணி, சட்டவிரோத வேலை, பாலியல் தொழில், தீவிரவாத செயல் மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட வற்புறுத்தப்படுகின்றனர். இதை செய்ய மறுப்பவர்களை சுட்டுக்கொல்வதாக மிரட்டுகின்றனர். குறிப்பாக, போலி தனியார் நிறுவனங்கள், ‘வெளிநாடுகளில் வேலை, மாதம் ரூ50 ஆயிரத்திற்கு மேல் சம்பளம், இலவச விசா’ என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து ஆட்களை இழுக்கின்றனர்.

துபாய், குவைத் உள்பட வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் மலையாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். இதன் காரணமாக கேரளா முழுவதும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் பாதிக்கு மேல் போலி நிறுவனங்களாகும். இவர்கள் துபாய், குவைத் உள்பட வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி அடிமை வேலைக்கோ அல்லது தீவிரவாத இயக்கத்தினரிடமோ அவர்களை விற்பனை செய்து விடுகின்றனர். கொச்சியை சேர்ந்த ஒரு போலி வேலை வாய்ப்பு நிறுவனம் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோரை குவைத்துக்கு கடத்திச் சென்றுள்ளனர். கேரளாவிலிருந்து அழைத்து செல்லப்படும் ஏராளமான பெண்கள் பல நாடுகளில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளனர்.

கேரளாவில் செயல்பட்டு வரும் இந்த போலி ஏஜென்சிகளுக்கு குவைத் உள்பட வெளிநாடுகளில் உள்ள ஏஜென்சிகளுடன் தொடர்பு இருக்கிறது. இதேபோல், நாடு முழுவதும் உள்ள போலி நிறுவனங்கள், அவர்கள் அனுப்பும் நாடுகளில் உள்ள போலி ஏஜென்சிகளுடன் தொடர்பு வைத்து, வேலை தேடி வருபவர்களை ஆசைகாட்டி அழைத்து சென்று சித்ரவதை செய்து வருகின்றனர். கை நிறைய சம்பளம் என கூறி தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு சொன்ன வேலை அங்கு வழங்கப்படுவதில்லை. மாறாக, குற்றச்சம்பவங்களில் ஈடுபட வைத்து சில கும்பல் பணம் சம்பாதிக்கின்றனர். கடந்த ஜூலை தாய்லாந்தில் ஐடி துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை தருவதாக கூறி கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொச்சி, ஐதராபாத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட 300 இந்திய ஐடி இன்ஜினியர்கள், பாங்காக் விமான நிலையத்தில் இறங்கியதும், அங்கிருந்து மியான்மருக்கு கடத்தப்பட்டனர்.

அங்கு அவர்கள், சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடும்படி கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், மீறினால், லேசர் துப்பாக்கி மூலம் மின்சார ஷாக் கொடுத்து, கடுமையாக தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தாய்லாந்துக்கு கடத்தப்பட்ட 300 இந்தியர்களில் 50 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள், சித்ரவதையை தாங்க முடியாமல் தங்களை தமிழக அரசு மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையேற்று மியான்மரில் சிக்கி உள்ள தமிழர்கள் உட்பட 300 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழர்களை மீட்டு கொண்டு வருவதற்கான செலவுகளை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடத்தப்பட்ட இந்தியர்கள் மியான்மரின் கயின் மாகாணத்தில் உள்ள மையவாடி பகுதியில் பினை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதி மியான்மர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. சில இன ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் 30 இந்தியர்களை மட்டும் இந்திய தூதரகம் மூலம் மீட்கப்பட்டுள்ளது. மையவாடி பகுதி அரசு கட்டுப்பாட்டில் இல்லாததால், இந்திய பொறியாளர்களை மீட்பது கடினம் என்று வெளியுறவு அமைச்சகம் மறைமுகமாக தெரிவித்து இருப்பதாக கருதப்படுகிறது. இதனால், மியான்மரில் சிக்கிய இந்தியர்கள் மீட்கப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எல்லையில் நடந்தது என்ன?

மியான்மரில்  சிக்கி உள்ள இந்தியர்கள் கூறியதாவது: எங்களில் சிலர் வேலை தேடி முகவர்கள்  மூலம் துபாய்க்கு சென்று இருந்தோம். அப்போது, துபாய் இன்வெஸ்ட்மென்ட்  பார்க்’ என்ற இடத்தில் ஏராளமான நிறுவனங்கள் வேலைக்காக ஆட்களை தேர்வு செய்து  கொண்டிருந்தார்கள். அங்கு சில நிறுவனங்கள் வித்தியாசமான முறையில் எங்களைப்  போல விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்து கொண்டிருந்தது. எங்களை தேர்வு செய்த  நிறுவனம், உங்களுக்கு தாய்லாந்தில் உள்ள நிறுவனத்தில்தான் வேலை என்று  கூறியது. ஏற்கெனவே சொந்த ஊரில் மிகவும் கடுமையான பொருளாதார சூழலில்  வேலைக்கு விண்ணப்பித்து வெளிநாடுவரை வந்து விட்டதால் கிடைத்த வேலையில்  சேருவதென்று தீர்மானித்து தாய்லாந்து வேலைக்கு ஒப்புக் கொண்டோம்.  தாய்லாந்து சென்ற பிறகு அங்குள்ள உள்ளூர் முகவர்களிடம் நாங்கள்  ஒப்படைக்கப்பட்டோம்.

இதேபோல், ஏராளமான இந்தியர்களும் அங்கு வந்திருந்தனர். அந்த  முகவர்கள் குழுவுக்கு ஒரு பெண் தலைவர் இருந்தார். அவர் பாங்காக் விமான  நிலையத்தில் இருந்து சுமார் 500 கி.மீ தூரமுள்ள எல்லை பகுதிக்கு எங்களை  அழைத்துச் சென்றார். அங்கு வைத்து எங்களுடைய பாஸ்போர்ட், விசா ஆவணங்கள்  அனைத்தையும் அந்த முகவர்கள் வாங்கிக் கொண்டனர். அந்த இடத்தில் ஒரு ஆறு  ஓடிக்கொண்டிருந்தது. அதை கடந்துதான் அலுவலகம் செல்ல வேண்டும் என கூறினார்.  அதனால் எங்களுடைய செல்பேசி மற்றும் பிற ஆவணங்களை முகவர்கள் வாங்கிக்  கொண்டனர். ஆற்றைக் கடந்து மறுநாள் காலையில் எங்களிடம் செல்பேசி  ஒப்படைக்கப்பட்டபோது, எங்களுடைய நெட்வொர்க்கை ஆன் செய்தோம். அப்போது  நாங்கள் உள்ள இருப்பிடத்தை பார்த்தபோதுதான் நாங்கள் இருப்பது தாய்லாந்து  அல்ல, மியான்மர் என்றே தெரிய வந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் கொடுமைபடுத்தப்படுபவர்கள் யார், யார்

* குடும்பம் இல்லாதவர்கள்

* குறைவாக படித்தவர்கள்

* குறைந்த திறன் கொண்டவர்கள்

* குறைந்த வருமானம் பெறுபவர்கள்

சிக்கியது எப்படி?

கால் சென்டர் மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபடும் சர்வதேச குழு ஐடி நிறுவனங்கள் என்ற போர்வையில், இந்தியர்களை  குறிவைத்து வெளிநாட்டு வேலை என்ற மோசடியில் ஈடுபட்டுள்ளது. தாய்லாந்தில்  டிஜிட்டல் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறையில் வேலை என்று இந்திய இளைஞர்களை ஏமாற்றியுள்ளது. இந்த நிறுவனங்கள், துபாய் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஏஜென்டுகள் மூலமாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிக்குரிய விளம்பரங்கள் வெளியிட்டு அதன் மூலம் இவர்கள் ஐடி வேலை தேடும் இளைஞர்களை  குறிவைத்துள்ளனர். இதில் நம்பி ஏமாந்து போகும் இளைஞர்களை மியான்மர்  நாட்டிற்கு கொண்டு சென்று மோசமான நிலையில் சிக்கி உள்ளனர்.

ரூ4 லட்சம் கொடுத்துதப்பினர்

சித்ரவதை செய்தும் குற்றச்செயல்களில் ஈடுபட மறுப்பவர்களிடம், 5 ஆயிரம்  அமெரிக்க டாலர் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால், 9 பேர் மட்டும் ஐதராபாத்தை சேர்ந்த அம்ஜத்  உல்லா கான் என்ற சமூக ஆர்வலரின் உதவியுடன் கிரிப்டோ கரன்சி மூலம் ரூ4 லட்சத்தை கொடுத்து விட்டு இந்தியா தப்பி வந்துள்ளனர். அம்ஜத் உல்லா வெளியிட்ட டிவிட்டரை பார்த்த  ஒன்றிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உதவி மையம், பாதிக்கப்பட்டுள்ள ஐடி  இளைஞர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண் மற்றும் இ-மெயில் முகவரியை  வெளியிட்டுள்ளது.

மனிதவள ஏற்றுமதிஇந்தியா முதலிடம்

* உலகளவில் என்ஆர்ஐகளின் மக்கள் தொகை 2.5 கோடி.

* உலகிலேயே இந்தியாதான் மிகப்பெரிய மனிதவள ஏற்றுமதியாளராக உள்ளது. ஆனால், எந்த இடம்பெயர்வு கொள்கையும் இந்தியாவிடம் இல்லை.

* இந்திய அரசு ஏழை தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறது.

* இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 3.2 கோடி என்ஆர்ஐ, ஓசிஐக்கள் இந்தியாவிற்கு வெளியே வசிக்கின்றனர்.

*  ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். இது உலகிலேயே அதிக அளவிலான புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையாகும்.

* ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 7-8 லட்சம் இந்தியர்கள் ‘குடியேற்ற சோதனை தேவை’ என்ற நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர்.

* எந்தச் செலவும்/பூஜ்ஜிய முதலீடும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு மனித வளத்தை  ஏற்றுமதி செய்யும் இந்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தைக்  கொண்டு இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது.

*  கடந்த ஆண்டு (2021-22), இந்தியா என்ஆர்ஐகளிடமிருந்து (வெளிநாடுவாழ் இந்தியர்கள்) ரூ7,25,350 கோடி அந்நிய செலாவணியை பெற்று உள்ளது. இது  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாகும்.

* ஆறு அரபு வளைகுடா நாடுகளில் வசிக்கும் 88 லட்சம் இந்தியத் தொழிலாளர்களால் பெரும்பாலான பணம் அனுப்பப்பட்டது.

கிரிப்டோ முதலீடுகளை பெற நிர்பந்தம்

மியான்மருக்கு கடத்தப்பட்ட இந்தியர்கள், அங்கு கட்டுமான நிலையில் இருந்த பெரிய  நிறுவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு நூற்றுக்கணக்கானோர்  வேலை செய்து கொண்டிருந்தனர். லேட்டஸ்ட் ஐபோன்கள், கணிப்பொறிகள் என அனைத்து  வசதிகளும் அங்கு இருந்தன. அங்கு இருந்த சில தனியார் நிறுவனத்தினர், சில  வாடிக்கையாளர்களின் தகவல்களை வழங்கி, அவர்களிடம் இருந்து கிரிப்டோ  முதலீடுகளை பெறுவதே உங்களுடைய பணி, சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு  லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருக்கும். இதற்கான இலக்கும்  எங்களுக்கும் நிர்ணயித்தனர் என்று அவர்கள் கூறியதாக பாதிக்கப்பட்ட  இந்தியர்கள் தெரிவித்தனர்.

போலி நிறுவனங்களுக்கு கடிவாளம் போடப்படுமா?

வேலை  வாய்ப்பு இருப்பதாக கவர்ச்சியாக வெளியிட்டு ஆட்களை கடத்தி வரும் போலி நிறுவனங்களால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த  நிறுவனங்கள் மூலம் பல இந்தியர்கள் கடத்தப்பட்டு தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட  குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். இதனால், இந்த நிறுவனங்கள் சர்வதேச  தொடர்புகள், குற்ற பின்னணிகள் குறித்து ஆராய்ந்து ஒன்றிய புலனாய்வு  அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இனி ஏமாறாதீர்கள்...

* வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், சம்பந்தப்பட்ட ஏஜென்சி பற்றி தீவிரமாக விசாரித்து அவர்கள் மூலம் செல்ல வேண்டும்.

*  ஏஜென்சிகள் மீது சந்தேகம் ஏற்பட்டால், எந்த நாடுகளுக்கு செல்கிறீர்களோ,  அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் விசாரித்து கொள்ள வேண்டும்.

*  வெளிநாடுகளில் வேலை என்ற ஒரு நிறுவனத்தின் பேரில் வாய்ப்பு வந்தால், அந்த  நிறுவனத்தின் இணையதளங்களை தீவிரமாக சரிபார்த்து கொள்ள வேண்டும்.   

துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட ஊழியர்கள்

மியான்மருக்கு  கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு முதல் ஒரு வாரத்துக்கு தங்களுக்கு மூன்று வேலை  உணவும், நல்ல வசதியும் கொடுத்து உபசரித்து உள்ளனர். ஆனால், நாட்கள் செல்லச்  செல்ல உரிய இலக்கை எட்டாதவர்களுக்கு உணவு அளவை குறைத்தும் தரக்குறைவாக  நடத்தியும், அடித்தும் துன்புறுத்தி உள்ளனர். பல நேரங்களில் துப்பாக்கி  முனையில் இலக்குகளை எட்ட தாங்கள் மிரட்டப்பட்டதாக அங்கு சிக்கி உள்ள  இந்தியர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

தாய்லாந்து ராணுவத்திடம் சிக்கிய 13 தமிழர்கள்

வெளிநாட்டு  வேலைக்காக முகவர்கள் உதவியுடன் துபாய் சென்ற தமிழகத்தை சேர்ந்த 13 பேர்  உட்பட 16 பேர், அங்கிருந்து தாய்லாந்து வழியாக மியான்மருக்கு சட்டவிரோதமாக  அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள், மியான்மர் நாட்டு ராணுவம் மற்றும் எல்லை  காவல் படையின் உதவியுடன் மீட்கப்பட்டு பிறகு மியான்மர் எல்லையில் உள்ள  தாய்லாந்தை இணைக்கும் ஆற்றுப்பகுதியில் விடப்பட்டுள்ளனர். அப்படி எல்லை  ஆற்றைக் கடந்து தாய்லாந்தின் பாங்காக் விமான நிலையத்துக்கு செல்வதற்காக 20  கி.மீ தூர பாதையை இரவில் கடக்கும் வேளையில்தான், தாய்லாந்தின் ராணுவத்திடம்  16 பேரும் பிடிபட்டுள்ளனர். தற்போது அவர்கள் பாங்காக்கில் உள்ள தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு  முகாமில் உள்ள 16 இந்தியர்களில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மூன்று பேர்  மற்றும் வேலூர், புதுக்கோட்டை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச்  சேர்ந்த தலா ஒருவர் உள்பட 10 பேர் உள்ளனர்.

Related Stories: