சென்னை விமான நிலையத்தில் பயணிகள் சோதனைக்கு புதிதாக காவி நிறத்தில் 140 கவுன்டர்கள்: நிறத்தை மாற்ற கோரிக்கை

சென்னை: சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக 64 கவுன்டர்கள் மட்டுமே உள்ளன. தற்போது, புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 140 கவுன்டர்கள் அமைத்து அதற்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில், பயணிகள் மற்றும் விமான சேவைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதனால் பயணிகள் மற்றும் விமான சேவைகளுக்கு தகுந்தாற்போல், விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணியை இந்திய விமானநிலைய ஆணையம் தொடங்கி பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த ஒருங்கிணைந்த புதிய முனையம் 5 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தின் தற்போதைய முனையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு சோதனைகள் நடக்கும், செக்-இன்-கவுன்டர்கள் 64 மட்டுமே உள்ளன. ஆனால் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 140 செக்-இன்-கவுன்டர்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 100 கவுன்டர்கள் முதல் கட்டமாகவும், அடுத்த 40 கவுன்டர்கள் இரண்டாம் கட்டமாகவும் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. இந்த புதிய கவுன்டர்களின் மீது வர்ணங்கள் பூசும் பணிகள் தற்போது நடக்கிறது. அனைத்து கவுன்டர்களுக்கும் ஒட்டுமொத்தமாக காவி கலர் பூசப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே உள்ள பழைய முனையத்தில் உள்ள செக்-இன்-கவுன்டர்கள், சிவப்பு, மஞ்சள், நீலம் என்று பல்வேறு கலர்களில் உள்ளன. புதிய கவுன்டர்கள் அனைத்தும் காவி கலரில் இருப்பதால் சென்னை விமானநிலையம் காவி மயமாக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், விமானநிலைய அதிகாரிகள், பயணிகளை கவரும் வகையில் இந்த புதிய வர்ணம் பூசப்படுவதாக தெரிவித்தனர். இந்த நிறத்தை மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

Related Stories: