ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு; அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு: காந்தி ஜெயந்தி அன்று நடத்த முயன்றதில் உள்நோக்கம் இருப்பதாக கருத்து

சென்னை: ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதை அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த முயன்றதில் உள்நோக்கம் இருப்பதாக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செல்வபெருந்தகை(சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்): தமிழகத்திற்காகவும், தமிழக மக்களின் பாதுகாப்பிற்கும் தக்க நேரத்தில் துணிச்சலான முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளார். கலைஞர் காலத்தில் இருந்து பல துணிச்சலான முடிவுகள் மதவாத சக்திகளுக்கு எதிராக எடுக்கப்பட்டது. அதன் நீட்சியாக இருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இரா.முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி பேரணியை நடத்த தேர்ந்தெடுத்தில் அரசியல் உள்நோக்கம் இருந்தது. தீய நோக்கத்தோடு, ஒரு உள்நோக்கத்துடன் செய்கின்ற இந்த செயலை  சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்க முடியாது என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

கே.பாலகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): ஒரு சம்பவம் நடந்தால் காந்தி ஜெயந்தி என்பது மறந்து விடும். இந்த சம்பவம் தான் ஞாபகம் இருக்கும்.  அந்த  மாதிரி ஒரு நிலையை உருவாக்க தான் திட்டமிட்டு அவர்கள் பணியாற்றினார்கள். அதனால் தான் இதற்கு அனுமதி கொடுக்க கூடாது என்று நாங்கள் வற்புறுத்தி வந்தோம். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்து தமிழக முதல்வர் ஒரு சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவு.

திருமாவளவன்(விசிக தலைவர்):  நாங்கள் அறிவித்த தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அனைத்து ஒன்றிய தலைநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறுவதாக அறிவித்து இருந்தோம். ஓட்டு மொத்தமாக தடை என்பது சற்று வருத்தமாக இருக்கிறது.

நெல்லை முபாரக்(எஸ்.டி.பி.ஐ.மாநில தலைவர்): மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, மதவாதத்தை வளர்த்தெடுக்கும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை அனுமதிப்பது மாநிலத்தின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் பேராபத்தாகும் என்பதை உணர்ந்து தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

அ.வியனரசு (தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி தலைவர்): அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ் நாட்டில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டையே அமளிக்காடாக மாற்ற திட்டமிட்டிருந்த இந்து மதவாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்குத் தடை விதித்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவு சிறப்புக்குரியதாகும். காவல் துறையின் இந்நடவடிக்கைக்கு ஆணைப்பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நேரத்திலான இந்த சரியான முடிவை தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி பாராட்டி வரவேற்கிறது.

அண்ணாமலை(பாஜ தலைவர்): இந்தியா  முழுவதும் ஒழுங்குடன், அமைதியுடன், கண்ணியத்துடன், கட்டுப்பாட்டுடன்,  ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும், ஆர்எஸ்எஸ் ஊர்வலம், இந்த ஆண்டு மட்டும்  எப்படி சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று தமிழக காவல்துறை  மட்டும் நினைப்பது ஏன்?. நம் அருகில் உள்ள பாண்டிச்சேரியில், காரைக்காலில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தடை ஏதுமின்றி நடைபெறுகிறது. இன்னும் கர்நாடகம், ஆந்திரம், கேரளம், தெலங்கானா என அனைத்து மாநிலங்களிலும் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. ஆகவே,  ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு, ஊர்வலம் நடத்த காவல் துறையின், முறையான அனுமதி வழங்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

Related Stories: