வட தமிழகத்தில் இன்று லேசான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை:  ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டலத்தில் காற்று சுழற்சி உருவாகி தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்த நிலையில், நேற்றும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. இருப்பினும் சில மாவட்டங்களில் வெயில் நிலவியது. தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அக்டோபர் 20ம் தேதியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு முன்னதாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. அதனால், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இது தவிர வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று  கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில இடங்களில் மட்டும்  தான் மழை பெய்தது. மற்ற இடங்களில் வெயில் நிலவியது. இந்நிலையில், வட  தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: