சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு; ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

* பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் தோழமை அமைப்புகள் ஒன்றிய அரசால் சட்டவிரோத தடுப்பு தடை சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது.

* வரும் 2ம் தேதி மாநிலத்தில் எந்த இடத்திலும் எவ்வித அமைப்புகளுக்கும் ஊர்வலம், பொதுக்கூட்டம் மற்றும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க இயலவில்லை.

சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சென்னை, மதுரை, கோவை உள்பட 51  இடங்களில் அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதேநேரம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி 385 இடங்களில் மதநல்லிணக்க பேரணி மற்றும் மனித சங்கிலி நடத்த விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முடிவு செய்து அதற்காக தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளனர்.

இந்த மனித சங்கிலி பேரணிக்கு 50க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, தமிழகம் உள்பட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் கடந்த 22ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், கடலூர், தாம்பரம், கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களில் 19 இடங்களில் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது.

இதனால் மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதை தொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபு எடுத்த அதிரடி நடவடிக்கையின்படி 11 சம்பவங்களில் தொடர்புடைய 19 பேரை அதிரடியாக ைகது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி அந்த மாவட்ட நிர்வாகிகள் தாங்கள் சார்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அதேநேரம் தற்போது பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் கிளை அமைப்புகள் செயல்பட 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னையை தடுக்கும் வகையில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அதே அக்டோபர் 2ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கலி போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்த அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். ஒரே நாளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் விசிகவின் சமூக நல்லிணக்க மனித சங்கலி போராட்டம் நடந்தால், தேவையில்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அம்பேத்கர் பிறந்த நாள் அன்று சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மற்றும் பாஜவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்தது.

அதேபோல் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கும் பாஜவினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. எனவே, இரண்டு அமைப்புகளும் ஒரே நாளில் அதுவும், அக்டோபர் 2ம் தேதி பேரணி மற்றும் மனித சங்கலி போராட்டம் நடத்தினால் பெரிய அளவில் மாநிலத்தில் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதாக உளவுத்துறை தமிழக அரசுக்கு தகவல் அளித்துள்ளது. இதனால் அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளின் ஊர்வலத்துக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க இயலாது என்று அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முந்தைய கால நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அதன் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தியை கோட்சே கொலை செய்தபோது இனிப்பு விநியோகித்து கொண்டாடினர்.

அக்டோபர் 2ம் தேதி விடுதைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கலி போராட்டம்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும். எனவே, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்தின்போது சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட அதிகளவில் வாய்ப்பு உள்ளதால் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான விளக்கமும் தமிழக அரசு சார்பில் தமிழக காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த விளக்கத்தில், ‘‘ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பின் சார்பாக வரும் 2ம் தேதி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த கடிதம் மூலம் அனுமதி கோரியிருந்தீர்கள். தங்களது கோரிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவ்வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 22ம் தேதி பொது ஆணை பிறப்பித்து அதில் தமிழகத்தில் 49 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த 28ம் தேதிக்குள் அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி தேசிய புலனாய்வு முகமை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் அலுவலகங்கள், அதன் உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட இதர இடங்களில் தீவிர சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

இதை கண்டித்து கடந்த 22ம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், மறியல் மற்றும் பலவித போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறாக நடத்தப்பட்ட போராட்டங்களின் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களுக்காகவும், முன்னெச்சரிக்கை அடிப்படையிலும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா உறுப்பினர்கள், அதன் ஆதரவாளர்கள் என 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் 19 பேர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை சோதனைக்கு எதிர்வினையாக கடந்த 22ம் தேதி முதல் பல இடங்களில் சமூக விரோதிகள் தமிழகத்தின் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசு போக்குவரத்து வாகனங்களை சேதப்படுத்தியும்,

ஒரு சில அமைப்புகளின் தற்போது மற்றும் முந்தைய நிர்வாகிகள், உறுப்பினர்கள் வீடுகள், கட்சி அலுவலகங்கள் மீது பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி பொது சொத்துகள் மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர். அதேநேரம், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ஒன்றிய அரசால் சட்டவிரோத தடுப்பு தடை சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடைக்கு எதிராக சமூக விரோதிகள் பொது அமைதியை குலைக்கும் செயல்களில் ஈடுபடவும், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஒன்றிய மற்றும் மாநில உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதேபோல், வரும் 2ம் தேதி அன்று வேறு சில அமைப்புகள் தமிழகம் தழுவிய சமூக ஒன்றுமை நல்லிணக்க மனிதச்சங்கிலி மற்றும் பேரணிகள் நடத்துவதாக அறிவித்து காவல்துறையினரிடம் அனுமதி கோரியுள்ளனர்.

தமிழகத்தில் காவல்துறை எந்தவிதமான ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க தீவிர ரோந்து, கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தற்போது ேமற்கொண்டு வருகிறது. சட்டம்- ஒழுங்கினை சிறப்பாக பராமரிக்க வேண்டியும், பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமையின் காரணமாகவும், பொது அமைதியை மாநிலம் முழுவதும் நிலைநாட்டிட வேண்டியதன் காரணமாகவும், வரும் 2ம் தேதி மாநிலத்தில் எந்த இடத்திலும் எவ்வித அமைப்புகளுக்கும் ஊர்வலம், பொதுக்கூட்டம் மற்றும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க இயலவில்லை.

மேலும், சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 22ம் தேதி அளித்த உத்தரவினை மறுபரிசீலனை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 27ம் தேதி மறுபரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே, வரும் 2ம் தேதி அன்று உங்கள் கோரிக்கையின்படி ஊர்வலம் மற்றும் பொது கூட்டம் நடத்த அனுமதி வழங்க இயலவில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: