குட்கா விற்ற கடைக்கு ‘சீல்’ உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

சென்னை: சென்னையில் குட்கா விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைத்து உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னையில் குட்கா உள்ளிட்ட போதையூட்டும் வஸ்துகளை விற்பனை செய்யவோ, பதுக்கி வைக்கவோ தடை உள்ளது. இந்தநிலையில் சென்னை புரசைவாக்கம் பகுதிகளில் குட்கா விற்பனை நடப்பதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜா தலைமையிலான குழுவினர் புரசைவாக்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுந்தரம் தெருவில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த கடைக்கு ஏற்கனவே 3 தடவை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதேபோல சூளை நெடுஞ்சாலையிலும் சில கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த அதிரடி சோதனையில் 5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘குட்கா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வோரை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். பொதுமக்களும் போதைப்பொருட்கள் விற்பனை குறித்த தகவல்களை 9444042322 என்ற உணவு பாதுகாப்புத்துறையின் புகார் எண்ணுக்கு தெரியப்படுத்தலாம்’’, என்றனர்.

Related Stories: