சென்னை மாநகராட்சி பகுதிகளில் அக்.10க்குள் மழைநீர் வடிகால் இணைப்பு பணி முடிக்கப்படும்: மேயர் பிரியா உறுதி

சென்னை: மழைநீர் வடிகால்களை இணைக்கும் பணி அக்டோபர் 10ம் தேதிக்குள் முடிக்கப்படும் என மேயர் பிரியா உறுதி அளித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், கடந்த 3 மாமன்ற கூட்டங்களிலும் பங்குபெறாத 118வது வார்டு மாமன்ற உறுப்பினர் மல்லிகா யுவராஜை, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு மீண்டும் மாமன்ற உறுப்பினராக செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் நேரமில்லா நேரத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மன்ற உறுப்பினர்களின் கேள்விகளும் மேயரின் பதிலும் வருமாறு:

98வது வார்டு உறுப்பினர் பிரியதர்ஷினி:  வார்டு 4ல் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகளின் 10 சிப்பங்கள் ஒரு ஒப்பந்ததாரருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதால் பணி மெத்தனமாக நடந்து வருகிறது.

மேயர் பிரியா: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை வேகப்படுத்தி உள்ளோம். வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆணையர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.  மழைநீர் வடிகால்களை இணைக்கும் பணி அக்டோபர் 10க்குள் முடிக்கப்படும்.

102வது வார்டு உறுப்பினர் ராணி ரவிச்சந்திரன்: கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்டவர்களே அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். தங்கள் வார்டு பகுதியில் உள்ள திமுக மகளிர் அணி நிர்வாகிகளை அம்மா உணவகத்தில் பணியமர்த்த வேண்டும்.

மேயர் பிரியா: அம்மா உணவகத்தில் மகளிர் குழு மூலமாகவே வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு தேவையான உரிய நபர்களை பரிந்துரைத்தால் உரிய நடவடிக்கை எடுத்து அம்மா உணவகத்தில் பணியமரத்தப்படுவார்கள்.

145வது வார்டு உறுப்பினர் சத்தியநாதன்: ஒவ்வொரு துறையை பார்க்கும் அரசு அதிகாரிகளுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் அதே போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து துறைகளிலும் மக்களின் பிரச்னைகளை கேட்டு அறிந்து நடவடிக்கை எடுக்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கும் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மேயர் பிரியா: அதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும். மாநகராட்சி மாமன்ற ஆளும்கட்சி தலைவர் ராமலிங்கம்: சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயரை போல மண்டல தலைவர்கள் தங்களது மண்டலங்களில் உள்ள பொதுமக்கள் பிரச்னைகளை கேட்க பயணிக்க வேண்டி உள்ளதால் மண்டல குழு தலைவர்களுக்கும், 15 உறுப்பினர்களை கொண்டு செயல்படும் நிலை குழு தலைவருக்கும், நியமன குழு உறுப்பினர்களுக்கும் வாகன ஏற்பாடு செய்ய  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

துணை மேயர் மகேஷ்குமார்: ஆளும்கட்சி தலைவர் ராமலிங்கம் கோரிக்கையை ஏற்று அடுத்த கூட்டத்தில் இது சம்பந்தமான தீர்மானத்தை அவரே கொண்டு வந்து, அந்த தீர்மானம் நிறைவேறும் பட்சத்தில் அதனை அரசுக்கு அனுப்பலாம்.

105வது வார்டு உறுப்பினர் அதியமான்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் நகரை எடுத்துக்காட்டாக கொண்டு பல்வேறு திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். அந்த அளவில் மாமன்ற உறுப்பினர்களை எஜுகேஷன் மற்றும் அப்சர்வேஷன் டூர்காக சிங்கப்பூர் அழைத்து செல்ல வேண்டும்.

துணை மேயர் மகேஷ் குமார்: இது சம்பந்தமாக மேயர் ஏற்கனவே நகராட்சி நிர்வாக துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். விரைவில் அவரிடமிருந்து பதில் வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு விவாதம் முடிந்தது.

* உறுப்பினர் செயல்பட அனுமதி

118வது வார்டு உறுப்பினர்  மல்லிகா தொடர்ச்சியாக 3 மாதங்கள் நடைபெற்ற மன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளாத விவரம் மன்றத்திற்கு சமர்ப்பித்து, தொடர்ந்து மன்ற உறுப்பினராக  செயல்பட சென்னை மாநகராட்சி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் குறிப்பிட்ட உள்ளவாறு செயல்பட பெரும்பான்மையான மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு அனுமதி அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள தனது மகள் விபத்து ஏற்பட்டதன் காரணமாக கவனித்துக்கொள்ள சென்ற வார்டு உறுப்பினர் மல்லிகா கடந்த 3 மாமன்ற கூட்டத்தில் பங்கு பெறாத காரணத்தினால் வார்டு உறுப்பினர் என்ற பதவியை இழந்த நிலையில், செயல்பட அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்படத்தக்கது.

Related Stories: