சோனியா ஆதரவு பெற்ற வேட்பாளர் யார்? காங்கிரஸ் தலைவர் தேர்தல் மனுத்தாக்கல் இன்று நிறைவு: கெலாட் விவகாரத்தில் 2 நாளில் முடிவு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கிறது. இதில், கட்சி மேலிடத்தின் விருப்பமான வேட்பாளராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால்,  முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்று கெலாட் திட்டவட்டமாக கூறி விட்டார். மேலும், அவருக்கு ஆதரவாக  90 ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

இதனால், ராஜஸ்தான் அரசியல் நிலவரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி சோனியா உத்தரவிட்டார். அதன்படி அளிக்கப்பட்ட அறிக்கையில், கட்சி கொறடா உள்ளிட்ட 3 பேர்தான் எம்எல்ஏக்களை தவறாக வழிநடத்துவதாகவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படியும் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற கெலாட், சோனியாவை சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை என்றும், ஜெய்ப்பூரில் நடந்த அரசியல் குழப்பங்களுக்கு சோனியாவிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்தார்.

அதே நேரம், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியை அழைத்து சோனியா பேசியுள்ளார். இதனால், கெலாட்டுக்கு பதிலாக இவரை நிறுத்த சோனியா விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரம், ராஜஸ்தான் முதல்வர் விவகாரம், உட்கட்சி குழப்பங்கள் குறித்து 2 நாளில் சோனியா முடிவு எடுப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. சசிதரூர் இன்று மனு தாக்கல் செய்கிறார். மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும் வேட்புமனு தாக்கல் செய்வதாக தெரிகிறது. இது தவிர, மேலும் பல தலைவர்களும் இன்று மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சோனியாவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் யார் என்பது இன்னும் உறுதி ஆகாத நிலையில், காங்கிரசில் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: