கள்ளக் காதலில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் புதிய கருத்து

புதுடெல்லி: ‘கள்ளக்காதலில் ஈடுபடும் ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. திருமண உறவை தாண்டி, கள்ளக்காதலில் ஈடுபடுவதை குற்றமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டம் 497ஐ, உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், கள்ள உறவுகளில் ஈடுபடும் ராணுவத்தினர் மீது நடவடிக்கை  எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் வழக்கு தொடர்ந்தது. நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜோசப் கூறுகையில், ‘திருமணம் தாண்டிய உறவு போன்றவை  அதிகாரிகளின் வாழ்க்கையை பாதிக்கும். படைகளில் கடைப்பிடிக்கப்படும்  ஒழுக்கத்தை சீரழிக்கும்.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று நீங்கள் எப்படி கூறலாம்? இது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று தெரிவித்தார். ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அவகாசம் கேட்டதால் விசாரணையை  டிசம்பர் 6ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories: