செய்தி துளிகள்

* வியட்நாம் ஓபன்: வியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகரில் வியட்நாம் ஓபன் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. அதில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா சார்பில் விளையாடிய தமிழக வீரர் சங்கர் முத்துசாமி உட்பட எல்லா இந்திய வீரர்களும் தோற்று வெளியேறினர்.

* தமிழ்நாடு வெற்றி: குஜராத்தில் நடைபெறும் 36வது தேசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று தமிழ்நாடு மகளிர் டென்னிஸ் அணி , அரியானா அணியுடன் மோதியது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டங்களில் தமிழ்நாடு

2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.

* அக்.6 முதல் விற்பனை: பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற உள்ளது. முதல் முறையாக 2 நாடுகள் இணைந்து நடத்தும் மகளிர் உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை அக்.6ம் தேதி முதல் FIFA.com/tickets என்ற இணைய தளம் மூலமாக தொடங்குகிறது.

* கபடி, கால்பந்து மோதல்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போல் நடைபெறும் கால்பந்து தொடரான ஐஎஸ்எல், கபடித் தொடரான புரோ கபடி ஆகியவை அக்.7ம்  தேதி தொடங்குகிறது. இரண்டு போட்டிகளும் ஒரே நாளில் தொடங்குவதுடன் தினமும் ஒரே  நேரத்தில் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. போதாதற்கு இந்த போட்டிகள் நடைபெறும் நாட்களில் ஆசிய கோப்பை மகளிர் டி20, உலக கோப்பை ஆடவர் டி20, யு-17 மகளிர் பிபா கால்பந்து என சர்வதேச ஆட்டங்களும் நடைபெற உள்ளன. ஒரே நேரத்தில் எல்லா போட்டிகளும் நடப்பதால் ரசிகர்கள் எதை பார்ப்பது, எதை விடுவது என்ற பரிதவிப்பில் உள்ளனர்.

* பைனலில் இந்தியா: உலக லெஜண்ட் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி நேற்று முன்தினம் ராய்பூரில் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் இடை நிறுத்தப்பட்ட போது ஆஸ்திரேலியா லெஜண்ட் அணி 17ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 136ரன் எடுத்திருந்தது. எஞ்சிய ஆட்டம் நேற்று மாலை நடந்தது. அதில் ஆஸி 20ஓவர் முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 171ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 19.2ஓவரில் 5 விக்கெட் மட்டும் இழந்து 175ரன் எடுத்து இலக்கை கடந்தது. அதனால் இந்திய லெஜண்ட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதுடன் இறுதி ஆட்டத்துக்கும் முன்னேறியது. இந்திய அணியில் ஆட்டநாயகன் நமன் ஒஜா 90(62பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), இர்பான் பதான் 37(12பந்து, 2பவுண்டரி, 4சிக்சர்) ரன்னுடன் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

* தமிழ்நாடு அணியில் முகமது: லக்னோ உட்பட 7 நகரிங்களில் அக்.11ம் தேதி தொடங்க உள்ள சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் விளையாட தமிழ்நாடு அணியில் தமிழக வீரர் எம்.முகமது மற்றும் அபிஷேக் தன்வர் ஆகியோர் சேர்க்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

* ஆசிய சாம்பியன் சிவா தாக்ரன்: தாய்லாந்தின் பாங்காக் நகரில் டபிள்யூபிசி ஆசிய கண்ட குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அதில் இந்திய வீரர் சிவா தாக்ரன்(25) தொழில்நுட்ப நாக் அவுட் முறையில் மலேசிய வீரர்  அதில் ஹபிதீசை மண்ணை கவ்வ வைத்து சாம்பியன் பட்டம் வென்றார்.

* முதலில் கோல்....: இந்திய ஹாக்கி அணியின் வீரர் நீலகண்ட சர்மா, ‘ ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே கோல்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்குடன் உலக கோப்பையில் களம் இறங்க உள்ளோம். காமன் வெல்த் போட்டியில் நாங்கள் விளையாடிய 4 ஆட்டங்களின் வீடியோவை மீண்டும் பார்த்தபோது இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்று கூறியுள்ளார். சமீபத்தில் முடிந்த  காமன்வெல்த் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 0-7 என்ற கோல் கணக்கில்  ஆஸ்திரேலியாவிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: