ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் முக்கிய திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை: ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் (Master Plan) முக்கிய திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (29.09.2022) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் (Master Plan) முக்கிய திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

2021 – 2022 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது “திருக்கோயிலுக்குப் பெருமளவில் வருகைதரும் பக்தர்களுக்கான முழுமையான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த 40 முதுநிலைத் திருக்கோயில்களுக்கான ஒருங்கிணைந்த பெருந்திட்டம் (Master Plan) வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக, சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிறுவாபுரி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், வயலூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிறுவாச்சூர், அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் (Master Plan) மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டார்கள்.

இத்திருக்கோயில்களில் தங்கும் விடுதிகள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், பக்தர்கள் வரிசைமுறை, மருத்துவ மையம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், வாகனம் நிறுத்துமிடம், மின்தூக்கி, கிரிவலப் பாதையில் அடிப்படை வசதிகள் போன்ற பக்தர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள்  மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த ஆய்வில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்திரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திரு. இரா.கண்ணன் இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், இணை ஆணையர் (திருப்பணி) திரு.பொ.ஜெயராமன், சம்பந்தப்பட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: