மருவாய் ஊராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

வடலூர்: குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருவாய் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில்  சென்னை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் திட்டத்தின் கீழ் சாலைப்பணி நடைபெற்று வருவதால் இங்கு ஏற்கனவே அமைந்திருந்த பேருந்து நிறுத்தம் இடிக்கப்பட்டது.

இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்துதான் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பொதுமக்கள் செல்வதற்கும் மற்றும் விவசாய விளைநிலத்திற்கு உரப்பொருட்கள் வாங்குவதற்கும் அரசு சார்ந்த அலுவலகப் பணிகளுக்கும் அருகிலுள்ள நகரத்திற்கு சென்று வருவதற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த பேருந்து நிறுத்தம் பெரிதும் உதவியாக இருந்து வந்தது. தற்பொழுது பேருந்து நிறுத்தம் இல்லாததால் சில அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பயணிகள் கைகளை காட்டியும் நிறுத்தாமல் செல்கின்றனர். மழை, வெயில் காலங்களில் ஒதுங்கி நிற்பதற்கு   மரங்கள் கூட இல்லை என்பதுதான் வேதனை.

 

இதனால் இப்பகுதி பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மேலும் இங்குள்ள நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகளை இந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லுமாறு அறிவுரை கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: