மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்றுத்தர வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

தாம்பரம்: பல சவால்களை சந்திக்கும் மாணவிகளுக்கு பள்ளிகளில்  தற்காப்பு  கலை கற்றுத்தரவேண்டும் என தாம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கிழக்கு தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள தனியார் பள்ளியில், செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், பிரக்ஞானந்தாவை பாராட்டி பேசினார்.

அப்போது, “கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை நான் சின்ன விவேகானந்தராக பார்க்கிறேன். மாணவர்கள் பலவீனமாக இருப்பது பாவம் என விவேகானந்தர் கூறியுள்ளார். பிரக்ஞானந்தா இளம் செஸ் வீரர், நான் இந்த நாட்டின் இளம் ஆளுநர். பிரக்ஞானந்தாவை போல செஸ் விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் ஊக்கப்படுத்தப்படவேண்டும். செஸ் விளையாட்டு போட்டியில் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் குழந்தைகள் ஊக்கப்படுத்தப்படவேண்டும்.

ஓடி விளையாடு பாப்பா என பாரதியார் சொல்லியதுபோல எப்படி படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேபோல விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதேபோல இன்றைக்கு பல சவால்களை சந்திக்கும் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளையும் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கவேண்டும். பல இடங்களில் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். முந்தைய காலங்களில் எப்படி பள்ளிகளில் மாரல் கிளாஸ் என ஒரு வகுப்பு இருந்ததோ அதேபோல இப்போதும் இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். விழாவில், செங்கல்பட்டு மாவட்ட பாஜ தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

Related Stories: