சொத்தை அபகரித்த வழக்கில் அதிமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு தலா 6 ஆண்டு சிறை தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த போடுவார்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர்(60). மணப்பாறை வடக்கு ஒன்றிய அதிமுக துணை செயலாளர். இவரது மனைவி நிர்மலாதேவி. மாற்றுத்திறனாளியான இவர், அரசு பள்ளி ஆசிரியர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நிர்மலாதேவி தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் வேறொரு பெண்ணை சந்திரசேகர் 2வது திருமணம் செய்தார். 2வது மனைவியின் பெயரும் நிர்மலா தேவி. இவர் அதிமுக முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்.

ஆசிரியை நிர்மலா தேவி பெயரில் மணப்பாறையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் இடம் இருந்தது.  இந்த இடத்தை முதல் மனைவியிடமிருந்து அபகரிக்க, 2 மனைவிகளுக்கும் ஒரே பெயர் என்பதால் ஆள்மாறாட்டம் செய்து (2வது மனைவியை முதல் மனைவியாக காண்பித்து) சந்திரசேகர் தனது பெயருக்கு 2018ம் ஆண்டு நவம்பரில் மணப்பாறை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை மாற்றி பதிவு செய்தார்.

இந்த மோசடி குறித்து மணப்பாறை போலீசில் முதல் மனைவி நிர்மலாதேவி புகார் செய்தார். அதன்பேரில் சந்திரசேகர் மற்றும் அவரது 2வது மனைவி மீது இருபிரிவுகளின்கீழ் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சந்திரசேகர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி மற்றும் சாட்சி கையெழுத்து போட்ட 2 பேர் என 4 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருப்பசாமி, குற்றம் சாற்றப்பட்ட அதிமுக நிர்வாகி சந்திரசேகர் மற்றும் அவரது 2வது மனைவிக்கு தலா 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சாட்சி கையெழுத்து போட்ட இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories: