முதலிரவில் நகை, பணத்துடன் பெண் ஓட்டம்: மேலும் பலரை வலையில் வீழ்த்தியது அம்பலம்

சேலம்: ஜோடி ஆப் மூலம் பழகி, லாரி டிரைவரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிக் கொண்டு முதலிரவு நாளில் ஓடிய இளம்பெண், மேலும் பலரை வலையில் வீழ்த்தி ஏமாற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள கொங்கணாபுரம் சாணாரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில் (48), லாரி டிரைவர். இவரது மனைவி, ஓராண்டிற்கு முன் இறந்துவிட்டார். 12 வயதில் மகன் உள்ளார்.

கடந்த 6 மாதத்திற்கு முன், 2வது திருமணம் செய்து கொள்வதற்காக, செல்போன் செயலியான ஜோடி ஆப்பில் தனது விவரத்தை செந்தில் பதிவு செய்துள்ளார். அதே ஆப்பில் பதிவு செய்திருந்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த கவிதா (எ) பிரியா என்பவர், செந்திலிடம் அறிமுகமாகி போனில் பேசியுள்ளார்.

பின்னர், செந்திலை திருமணம் செய்து கொள்வதாக கூறி, சேலம் வந்து அரியானூரில் உள்ள ஒரு கோயிலில் வைத்து, கடந்த ஜூன் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அன்றையதினம் இரவு செந்திலின் வீட்டில் தங்கிய கவிதா, அதிகாலையில் மாயமானார். செந்தில் வீட்டில் வைத்திருந்த ரூ.1.47 லட்சம் பணம், 4 செல்போன், முதல் மனைவியின் நகை போன்றவற்றை சுருட்டிக் கொண்டு சென்றிருப்பது தெரியவந்தது.

இதுபற்றி கொங்கணாபுரம் போலீசில் ெசந்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அப்பெண், செந்திலிடம் ஜோடி ஆப் மூலம் ஆசையாக பேசி வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து முதலிரவு நாளில் நகை, பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர், கோவை மாவட்டம் காளப்பநாயக்கன்பாளையத்தில் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்ததில், அவர் அங்கிருந்து ஒரு மாதத்திற்கு முன் வீட்டை காலி செய்து விட்டுச் சென்றது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் அப்பெண் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

செந்திலை ஏமாற்றிய பெண், இதற்கு முன் கோவை செல்வபுரத்தில் தனியார் நிறுவன ஊழியரையும், தேனியில் சலவை தொழிலாளியையும், மதுரையில் கட்டிட தொழிலாளியையும் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். பல்வேறு திருமண வரன் தேடும் ஆப்களில் பதிவு செய்து கொண்டு, கல்யாண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடம் 10க்கும் மேற்பட்டவர்கள் ஏமாந்திருப்பதாக தெரியவந்துள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கல்யாண மோசடி பெண்ணுக்கு துணையாக வக்கீல்கள் சிலர் இருந்துள்ளனர். அவர்கள், கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் செந்தில் புகார் கொடுத்ததும் வந்து பஞ்சாயத்து பேசியுள்ளனர்.

அப்போது, ஏமாற்றிய பணம், நகை, செல்போனை கொடுத்து விடுவதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நாளில் கொடுக்காததால், மீண்டும் செந்தில் போலீசில் புகார் கொடுத் துள்ளார். அதன்பேரில் அப்பெண் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது, மோசடி பெண் கவிதாவிடம் ஏமாந்தவர்கள் வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் கொடுத்துள்ளார்களா?, வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், கவிதாவை கைது செய்ய, தீவிர தேடுதல் வேட்டையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: