மாணவியை கடத்த வந்த 3 வாலிபர்கள் சிறையிலடைப்பு

சேலம்: சேலம் அருகே மாணவியை கடத்த வந்த 3 வாலிபருக்கு மக்கள் தர்மஅடி கொடுத்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட ராமமூர்த்தி நகர் கிராமம், தர்மபுரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் மட்டுமின்றி மலை கிராமங்களைச் சேர்ந்தவர்களும் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, ராமமூர்த்தி நகர் பகுதியில் 3 வாலிபர்கள் டூவீலரில் சுற்றித்திரிந்தனர்.

இதை கண்டு சந்தேகமடைந்த கிராம மக்கள், அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அங்குள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வரும் ஒரு மாணவியை கடத்திச் செல்வதற்காக, வேலூர் மாவட்டத்திலிருந்து 3 பேரும் வந்திருப்பது தெரியவந்தது. மாணவியின் கிராமத்தையும், இருப்பிடத்தையும் தெரிந்து கொண்டு, இரவு நேரத்தில் அங்கு சுற்றி வந்ததாக கூறியதால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது. ராணிபேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மகன் சதீஷ்குமார்(23). இவரது நண்பர்களான நவீன்(18), விக்னேஸ்வரன்(18) ஆகியோர் கல்லூரியில் படித்து வருகின்றனர். வேலூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் சதீஷ்குமார் பணியாற்றி வருகிறார். அதே கம்பெனியில், காடையாம்பட்டி ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணும் வேலை செய்துள்ளார். பின்னர், ஊர் திரும்பிய அந்த பெண், அடிக்கடி சதீஷ்குமாருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். அப்போது, அந்த பெண் தனது பக்கத்து வீட்டைச்சேர்ந்த பள்ளி மாணவியிடம் போனை கொடுத்து, சதீஷ்குமார் உள்ளிட்டோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

தொடர்ந்து போனிலேயே பேசி வந்த மூவரும், அந்த மாணவியை நேரில் பார்ப்பதற்காக, ஒரே டூவீலரில் ராமமூர்த்தி நகர் பகுதிக்கு வந்துள்ளனர். மாணவியின் கிராமம் மற்றும் வீட்டை கண்டறிந்து, அவரை கடத்திச் செல்வதற்காக அங்கு சென்றுள்ளனர். இதையறிந்த பொதுமக்கள் மூவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: