வாலாஜாபாத் அருகே உள்ள குடோனில் காஸ் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது: 5 பேர் மீது வழக்கு

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே நேற்றிரவு ஒரு தனியார் குடோனில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நள்ளிரவில் சென்னை கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில், தொழிற்சாலை மற்றும் உணவகங்களுக்கு தேவையான ராட்சத காஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யும் தனியார் குடோன் உள்ளது. இந்நிறுவனத்தை ஜீவானந்தம் என்பவர் நடத்தி வருகிறார். இதில் வடமாநிலங்களை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வாலிபர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு காலி சிலிண்டர்களை குடோனில் இறக்கிவிட்டு, சப்ளை செய்த காஸ் சிலிண்டர்களுக்கான கணக்கு வழக்குகளை நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் ஒப்படைத்து கொண்டிருந்தனர். அப்போது குடோனில் இருந்து கரும்புகையுடன் தீ பரவி கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதில் வெப்பம் தாங்காமல், அங்கிருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிலிருந்து அச்சத்துடன் வெளியே ஓடிவந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டு கோட்டை, உத்திரமேரூர், மறைமலைநகர் பகுதியில் இருந்து 5 நவீன தீயணைப்பு கருவிகளுடன் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி, காஸ் குடோனில் பரவிய தீயை அணைத்தனர். இவ்விபத்தில் தேவரியம்பாக்கத்தை சேர்ந்த பூஜா (19), 8ம் வகுப்பு மாணவர் கிஷோர் (13), கோகுல் (22), சந்தியா (21), நிவேதா (21), குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், சண்முகப்ரியன், ஆமோத்குமார், தமிழரசன் (10), குடவாசல் அருண் (22), குணால் (22) உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 6 பேருக்கு 80 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால் அவர்களை நேற்று நள்ளிரவில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 6 பேருக்கு 50 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் பரவியதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை தரப்பில் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் நேற்று நள்ளிரவு அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம் ஆகியோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினர். அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் செங்கல்பட்டு ராகுல்நாத், காஞ்சிபுரம் ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சுகுணாசிங், சுதாகர், சார் ஆட்சியர் சஞ்சீவனா உள்பட பலர் தீக்காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, உயரிய சிகிச்சை அளிக்கும்படி வலியுறுத்தினர்.

இந்த தனியார் காஸ் குடோனை, கிராமப்புற குடியிருப்புகளுக்கு மத்தியில், அப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி, அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவரின் செல்வாக்கை பயன்படுத்தி, அவரது தம்பி ஜீவானந்தம் நடத்தி வந்ததாகவும், இவ்விபத்தில் அவரும் அவரது 3 மகள்களும் பலத்த தீக்காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தி ஊராட்சி மன்றத்தலைவர் அஜய்குமார் உள்பட 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமாரை இன்று கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்து தொடர்பாக மேலும் 2 பேர் தலைமறைவானதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: