மரக்கரிக்கு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்: வங்கிகள் மூலம் கடனுதவி கோரிக்கை

சாயல்குடி: பருவமழை துவங்கி விவசாய பணிகள் நடப்பதற்குள் விறகை கரியாக்கி விற்பனை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதால், கிராமங்களில் கரிமூட்டம் தொழில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பின் தங்கிய பகுதியாக கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, திருப்புல்லானி. நயினார்கோயில், போகலூர், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை உள்ளிட்ட ஒன்றியங்கள் உள்ளன. இப்பகுதி கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.

இப்பகுதியில் போதிய நீர் ஆதாரங்கள் இருந்தும், வரத்து தண்ணீருக்கு வழியில்லாததால் மானாவாரி எனப்படும் மழையை நம்பி மட்டுமே ஒரு போகம் விவசாயம் செய்யப்படுகிறது. இதனால் மழை காலத்தில் மட்டுமே விவசாயத் தொழில் நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக சீமை கருவேல மர கரி மூட்டம் தொழில் கைகொடுக்கிறது. இதனால் கருவேல மரம் வெட்டுதல், கட்டை பிடுங்குதல், கரிமூட்டத்திற்கு விறகு சுமத்தல், அடுக்குதல், சுடுதல், கரியை பிரித்து, மூட்டையில் ஏற்றுதல் உள்ளிட்ட கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

கடந்த 2019 முதல் 2020 வரை கொரோனா பாதிப்பு வந்ததிலிருந்து கிராமங்களில் டன் கணக்கில் கரிகள் தேக்கமடைந்தது. கரிமூட்ட கரிக்களுக்கு போதிய விலை கிடைக்காததால், நூற்றுக்கணக்கான கரி மூட்டங்கள் சுடாமல் அடுக்கிய நிலையிலும், சுடப்பட்ட கரிமூட்டங்கள் பிரிக்காமலும் கிடந்தது. இந்த நிலையில் கடந்த ஓராண்டாக கரிக்கு உரிய விலை கிடைப்பதால் மீண்டும் விறகு வெட்டி, மூட்டம் சுட்டு, கரியாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு சில நாட்களுக்குள் பிராதன மழையான வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளது.

இதனை எதிர்பார்த்து விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், மழை பெய்து, பயிர்கள் முளையிட்டால் களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் முதல் அறுவடை வரை என 4 மாதங்களுக்கு விவசாய பணிகள் இருப்பதால் தற்போது கரி சுடும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெடுங்குளம் விவசாயிகள் கூறும்போது, ‘‘சீமை கருவேல மரத்தின் கிளைகளை சீவுதல், வெட்டுதல், சிறு துண்டுகளாக வெட்டுதல், கரிமூட்டத்திற்கு விறகு அடுக்குதல், கரிமூட்டத்தை பிரித்து கரி சேர்த்தல் போன்ற பணிகளுக்கு ஆண்களுக்கு ரூ.500ம், பெண்களுக்கு ரூ.300 கூலியாக கொடுக்கப்படுகிறது.

கரியை மூட்டையில் கட்டி ஏற்றுவதற்கு ரூ.800 கூலியாக வழங்கப்படுகிறது. கடந்த கொரோனா காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக தொழில் சிறப்பாக நடந்து வருவதால் தேக்கமடைந்த பழைய விறகுகளையும், புதிய விறகுகளையும் மூட்டத்தில் சுட்டு கரியாக்கி வருகிறோம். மழை பெய்து விவசாயப் பணிகள் துவங்கும் முன் விறகை கரியாக்கி விற்கவேண்டும் என்பதால் வேகமாக செய்து வருகிறோம். தூத்துக்குடி உள்ளிட்ட வெளிமாவட்ட பகுதியிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மாடர்ன் ரைஸ்மில், பட்டரை, உணவங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களிலுள்ள தொழிற்சாலை பயன்பாட்டிற்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சீமை கருவேல மரத்துண்டுகள் மற்றும் சுடப்பட்ட கரித்துண்டுகளை மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். ஒரு மூட்டை ரூ.1000 முதல் 1500 வரையிலும், ஒரு டன் மரக்கரி ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆகிறது என்றார்.

உரிய விலை வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரிமூட்டம் தொழில் என்பது விவசாயிகளுக்கு பரம்பரை தொழில் போன்று பல வருடங்களாக நடந்து வருகிறது. விவசாயம் கைவிட்டாலும் கூட விறகு கரி கைவிடாது. எனவே அரசு இப்பகுதியில் மரக்கரியை வாங்குவதற்கு உரிய விலை நிர்ணயம் செய்து நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், வங்கிகள் மூலம் கரிமூட்டத்தொழிலுக்கு கடனுதவி வழங்க வேண்டும். மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: