கொள்ளிடம் அருகே கடல் அரிப்பை தடுக்க மடவாமேடு கடற்கரையில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்: மீனவர்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே மடவாமேடு கடற்கரையில், கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர மடவாமேடு கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் இங்குள்ள கடற்கரை பகுதியிலேயே எடுத்து வந்து சாதாரணமாக உள்ள மண் தரையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு பிடிக்கப்படும் பல வகையான மீன்கள் உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வரும் சில்லறை விற்பனையாளர்கள் இங்கிருந்து மீன்களை வாங்கி கொண்டு சைக்கிள் மற்றும் இரு சக்கர மோட்டார் பைக்குகள் மூலம வெளியூர் கிராமப் பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இங்கு சில வகையான மீன்கள் உலர வைக்கப்பட்டு கருவாடு ஆக்கப்படுகின்றன.இங்கிருந்து கருவாடுகளும் வெளியூர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் இங்கு வந்து மீன்கள் மற்றும் கருவாடுகளை வாங்கி செல்கின்றனர்.

பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் பிரத்தியேகமாக பிடிக்கப்பட்டு அங்கு மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மீன் விற்பனை கூடம் மூலமாக அதிக அளவில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும்,பழையாறு துறைமுகத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மடவாமேடு கிராமத்திலும் மீனவர்கள் பழையாறு துறைமுகத்திற்கு வராமலேயே மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வரும் அளவுக்கு மடவாமேடு கிராமத்தில் கடல் வசதி அமைந்துள்ளது. இதனால் அங்கிருந்தே கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் விசைப்படகுகளுக்கு பதிலாக மீனவர்கள் பைபர் படகுகளை மட்டுமே பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இங்குள்ள மீனவர்கள் விரும்பும் அளவுக்கு இந்த கடல் பகுதி அமைந்துள்ளதால் மீனவர்கள் இங்கேயே பெரிதும் விரும்பி மீன்களை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் வரலாற்றிலேயே எப்பொழுதும் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு வருடங்களில் கடல் அரிப்பு அதிகமாகி வருவதை எண்ணி மடவாமேடு மீனவர்கள் தினந்தோறும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் போது கடல் அலைகள் அதிகமாக எழும்பி வேகமாக எழும்பி வந்து மீனவர்களின் குடியிருப்பு பகுதிகளையும் அவ்வப்போது தொட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த வருடங்களில் இப்படி அதிகப்படியான கடல் சீற்றம் இல்லை என்றும் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படாமல் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படுவதுடன் இதுவரை எதிர்பாராத அளவுக்கு மண்ணரிப்பு ஏற்பட்டு கரைப்பகுதி கடலுக்குள் சென்ற வண்ணம் இருந்து கொண்டிருக்கிறது. மடவாமேடு கடல் பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்துக்கும் ஒரு கிலோமீட்டர் அகலத்தக்கும் கடலுக்குள் மடவாமேடு கிராமத்தின் நிலப்பகுதி கடந்த இரண்டே வருடங்களில் கடலுக்குள் அடித்துச் சென்று விட்டது என்று மடவா மேடு மீனவர்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து தினந்தோறும் மடவா மேடு நிலப்பகுதி அலைகளால் மோதி மண் அரிப்பு ஏற்பட்டு நிலப்பகுதி கடலுக்குள் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். உடனடியாக மடவா மேடு கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பாறாங்கற்களை கொண்டு வந்து போட்டு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். அப்படி செய்ய தவறினால் இன்னும் ஒரு வருடத்தில் கடற்கரையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்புகளை கடல் நீர் எளிதில் புகுந்து சூழ்ந்துவிடும். மேலும் இந்த மடவாமேடு கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை கடல்நீர் மிக வேகமாக சூழ்ந்து அத்தனை குடியிருப்பு வீடுகளையும் கபலீகரம் செய்து விடும் என்றும் மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எனவே மின்னல் வேகத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மடவாமேடு கிராமத்தில் கடற்கரையை ஒட்டி இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கும் பாறாங்கற்களை போட்டு கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்து கடல் அரிப்பை தடுத்து மடவா மேடு மீனவ கிராம மக்களை காப்பாற்ற வேண்டும் என்று கொள்ளிடம் ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன் தெரிவித்தார். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories: