தளவானூர், எல்லீஸ்சத்திரத்தை தொடர்ந்து சொர்ணாவூர் அணைக்கட்டு உடையும் அபாயம்: 3 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்

தென்பெண்ணை ஆற்றில்கட்டப்பட்ட தளவானூர், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுகள் உடைந்த நிலையில் தற்போது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சொர்ணாவூர் அணைக்கட்டும் உடையும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதால் 3 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.  

தென்னிந்தியாவின் முக்கியநதிகளில் ஒன்றாக தென்பெண்ணை ஆறு உள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பெண்ணை ஆறாக பிறந்து, தமிழகத்தின் வடமாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் வழியாக சென்று கடலில் கலக்கிறது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மட்டும் 106 கிமீ நீளத்திற்குப் பாய்கிறது. விவசாயிகளின் முக்கியநீர்ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றிலிருந்து, மார்கண்ட நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, மலட்டாறு, கெடிலம் ஆறுகள் பிரிந்து ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளையும் நிரப்புகின்றன.

இதனிடையே, தென்பெண்ணை ஆற்றில் விவசாயிகள் பயன்பெறும்வகையில் 7 இடங்களில் அணைக்கட்டுகள் கட்டப்பட்டு நீர்தேக்கம் செய்யப்பட்டன. அதன்படி அனியாளம், கிருஷ்ணகிரி, நடுங்கல், சாத்தனூர், 5வது அணையாக திருக்கோவிலூாிலும், 6வது எல்லீஸ்சத்திரத்திலும், கடைசியாக 7வது அணைக்கட்டு விழுப்புரம் - கடலூர் மாவட்ட த்திற்கும் இடைபட்ட பகுதியில் சொர்ணாவூரில் அமைந்துள்ளது. இதற்கிடையே, சமீபத்தில் விழுப்புரம் அருகே தளவானூரிலும், கடலூர் மாவட்ட எல்லையான சின்னக்கள்ளிப்பட்டு - எனதிரிமங்கலம் இடையேயும் புதிதாக 2 தடுப்பணைகள் கடந்த ஆட்சியில் கட்டப்பட்டன.

மொத்தம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 9 தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்தஅதிமுக ஆட்சியில் தளவானூரில் ரூ.25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை சில மாதங்களிலேயே உடைப்பு ஏற்பட்டு மதகுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. பின்னர், ஊருக்குள் வெள்ளம் புகாமலிருக்க அணைக்கட்டு முழுவதுமாக வெடிவைத்து தகர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த எல்லீஸ்சத்திரம் தடுப்பணையும் பலவீனமடைந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால், இப்பகுதியில் தண்ணீரை சேமிக்க முடியாமல் வீணாக கடலில் கலக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 3வதாக சொர்ணாவூர்அணைக்கட்டும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தென்பெண்ணைஆற்றின் கடைசியாக அமைந்துள்ள இந்த தடுப்பணை ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, புதுச்சேரி மாநில விவசாயிகளும் பயனடைந்துவந்தனர். அணை நிரம்பும்போது, பங்காரு வாய்க்கால் வழியாக கரையாம்புத்தூரை கடந்து பாகூர் ஏரி உள்ளிட்ட 24 ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் அணைக்கட்டு அமைந்துள்ள பகுதிகளில் அளவுக்கு அதிகமாக மணல் சுரண்டப்பட்டதால் தற்போது அணை பலவீனமாகியுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த அதிமுகஆட்சியில் பழமைவாய்ந்த அணைக்கட்டுகளை முறையாக ஆய்வு செய்யாததன் விளைவுதான் தற்போது எல்லீஸ்சத்திரம் அணை உடைப்பைப்போன்று சொர்ணாவூர் அணைக்கட்டின் நிலையும் ஏற்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த 2021ம் ஆண்டு முதல் தென்பெண்ணை ஆற்றில் 6 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதும் மாதக்கணக்கில் தண்ணீர்சென்று கொண்டிருக்கிறது. ஆனால், அணைகள் அடுத்தடுத்து உடைந்துவருவதால் இந்த தண்ணீரை சேமிக்கமுடியாமல் வீணாக கடலில் கலக்கும்நிலை ஏற்பட்டுள்ளன. எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டுகளில் தண்ணீரை சேமிக்க முடியாததால் அதிகளவிலான தண்ணீர் சொர்ணாவூர் அணைக்கட்டு பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பலவீனமடைந்த அணைக்கட்டு அதிகளவு தண்ணீர் வரத்தால் எப்போது வேண்டுமானாலும் உடைப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளனர். எனவே, துறைஅதிகாரிகள் நேரில்ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அன்றே உணர்த்திய தினகரன்

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2015-16ம் ஆண்டுகளில் சொர்ணாவூர் தென்பெண்ணை ஆற்றில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் சுரண்டப்பட்டது. குறிப்பாக அணைக்கட்டு என்று பாராமல் கூட அதன் அருகில் பொக்லைன் மூலம் பல அடிஆழம் போட்டு மணல் சுரண்டப்பட்டது. அப்போதே அணை பலவீனமடைந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரியிடம் எடுத்துரைத்தபோதும் கண்டுகொள்ளவில்லை. அப்போதே இதனை சுட்டிக்காட்டி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது அணை உடையும் நிலைக்கு வந்திருக்காது.

புதிய அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாய சங்க தலைவர் கலிவரதன் கூறுகையில், சொர்ணாவூர் அணைக்கட்டில் தண்ணீர் நிரம்புவதன் மூலம் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி எல்லை பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த ஆண்டே அணை பலவீனம் ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் பார்வையிட்டு தற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவே சென்னை ஐஐடி வல்லுனர் குழுக்கள் நேரில் ஆய்வு செய்து உடைப்பு ஏற்படும் பகுதியில் கோட்டிங் செய்து அணை முழுவதும் உடையாமல் தடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தற்போது புதிய அணை கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அணை கட்டும் பணியை விரைவில் துவங்க வேண்டும். ஏனென்றால் மூன்று மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் உள்ள இந்த அணை உடைந்துவிட்டால் தண்ணீர் முழுவதும் வீணாக கடலில் தான் சேரும். இதனை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: