தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் UPI மூலம் கட்டணம் செலுத்தும் வசதியினை தொடங்கிவைத்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திருக்கோயில்களில் கடன் அட்டை ( Credit Card ), பற்று அட்டை ( Debit Card) மற்றும் ஒருங்கிணைந்த  பரிவர்த்தனை தரவு ( UPI ) மூலமாக கட்டணம் செலுத்தும் வசதியினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

திருக்கோயில்களில் இணையவழி சேவையினை மேம்படுத்தும் பொருட்டு, ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டத்தின் கீழ், கட்டண சேவை வசதியினை எளிமைப்படுத்தவும், விரைவுபடுத்தவும் மற்றும் கட்டண சீட்டு மையங்களில் கூட்டத்தினை கட்டுப்படுத்தவும் பக்தர்களிடமிருந்து சேவைக்கான கட்டணத்தை ரொக்கமாக பெற்றுக்கொண்டு கையடக்க கருவிகள் (PoS)  மூலம் கட்டண சீட்டுகள் வழங்கும் முறை  கடந்த 28.04.2022 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் மூலம் 471 திருக்கோயில்களுக்கு 1,550 கையடக்க கருவிகள் வழங்கப்பட்டு, நாளது தேதி வரை 51,32,265 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு 22.91 கோடி ரூபாய் திருக்கோயில்களுக்கு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. பக்தர்களின் சேவைகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கத்துடனும், மின்னணு பணப் பரிமாற்றத்தினை ஊக்குவிக்கும் வகையிலும் கடன் அட்டை (Credit Card), பற்று அட்டை (Debit Card) மற்றும்  ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) மூலமாக கையடக்க கருவிகளில் (PoS) கட்டணம் செலுத்தும் வசதியினை  இன்று (29.09.2022) இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சேவைகளுக்கு கட்டணம் செலுத்திய பக்தர்களுக்கு கட்டண சேவை இரசீதினை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். இத்திட்டம்,  முதற்கட்டமாக, 471 திருக்கோயில்களில் செயல்படுத்தப்படுகிறது. துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இதர திருக்கோயில்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, அனைத்து திருக்கோயில்களிலும் அச்சடித்த சீட்டுகளுக்கு பதிலாக கணிணி வழி கட்டணச் சீட்டுக்கள் மட்டுமே வழங்கும் நடைமுறை ஏற்படுத்தப்படும்.

இந்த சேவை பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து இந்து சமய அறநிலையத்துறையின் ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மைத் திட்ட மென்பொருள் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இந்த வசதியினை திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள்  பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் இ.ஆ.ப., ந.திருமகள், ஹரிப்ரியா, பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் மனோஜ் குமார், வட்டார விற்பனை தலைவர் அக்க்ஷய் சதுர்வேதி, கார்பரேட் விற்பனை மேலாளர் ஜெய்சங்கர், வட்டார விற்பனை மேலாளர் ஆஷிஷ், முதுநிலை கணக்கு மேலாளர் பிரசன்னா, தேசிய தகவலியல் மையத்தின் முதுநிலை தொழில்நுட்ப இயக்குநர்கள் கீதாராணி, கோவிந்தன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: