ஆயுத பூஜையை முன்னிட்டு சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பு: ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்

சென்னை: ஆயுத பூஜைக்கு முன்பாக  குறைக்கப்பட்ட புதிய கட்டண பட்டியல் வெளியிடப்படும் என ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 4- ம் தேதி ஆயுத பூஜை வருவதையொட்டி சொந்த ஊருக்கு பயணிக்கும் விதமாக  பலரும் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  சென்னையில் இருந்து நெல்லைக்கு அதிகபட்சமாக ரூ.4000, கோவைக்கு ரூ.3200 வரையும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற ஊர்களுக்கும் விமான கட்டணத்திற்கு நிகரான கட்டணம் வசூலிக்கப்படுவதால் புகார் எழுந்தது. இதையடுத்து ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து ஆம்னி பேருந்துகளின் முக்கிய ஆப்ரேட்டர்கள் ஆன்லைன் மூலம் இன்று ஆலோசனை நடத்தினர். அப்போது இந்த மாதம் இறுதிக்குள் குறைக்கப்பட்ட புதிய கட்டண விவரத்தை வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. விரைவில் புதிய கட்டண பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories: