காவல் அருங்காட்சியக முதலாண்டு நிறைவுநாள்: 195 மாணவர்களுக்கு பரிசு

சென்னை: எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் தொடங்கி, ஓராண்டு நிறைவு அடைந்ததை முன்னிட்டு கடந்த 14ம் தேதி முதல் 26ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, விவாதமேடை, மாறுவேடப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்று மாலை 4 மணியவில் காவல் அருங்காட்சியகத்தில் நடந்த  முதலாம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழாவில், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்   போட்டிகளில் வெற்றி பெற்ற 52 மாணவர்கள் மற்றும் 143 மாணவர்கள்  என மொத்தம் 195 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு மற்றும்  சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

ஓராண்டு நிறைவுநாளான நேற்று ஒருநாள் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்பட்டது. மேலும், மன்னர் காலத்தில் காவல் அதிகாரிகள் அணிந்திருக்கும் உடை அணிந்த 250 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழங்கால சிலை திறக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதில், காவல்துறை இயக்குனர்கள் ஷகீல் அக்தர் (சிபிசிஐடி), சீமா அகர்வால் (சீருடை பணியாளர் தேர்வாணையம்), தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், சென்னை  காவல் கூடுதல் ஆணையர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, லோகநாதன், கபில்குமார் சரட்கர், காவல் இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: