ரூ1 லட்சம் கடனை கேட்டதால் வீட்டிற்குள் நுழைந்து பெண் மானபங்கம்: வாலிபர் கைது

சென்னை:  தி.நகர் அபிபுல்லா சாலையை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது தாய் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவருக்கு வட்டிக்கு ரூ2 லட்சம் கொடுத்துள்ளார். கடன் கொடுத்து பல மாதங்களுக்கு பிறகு சுப்ரமணி வாங்கிய கடனில் ரூ1 லட்சத்தை திரும்ப கொடுத்துள்ளார். ஆனால் மீதமுள்ள ரூ1 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது தாய் கொடுத்த கடனை திரும்ப பெற லட்சுமி, தி.நகர் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள சுப்ரமணி வீட்டிற்கு அடிக்கடி சென்று பணத்தை கேட்டுள்ளார்.

இது கடன் வாங்கிய சுப்ரமணியன் மகன் விக்னேஷ் (எ) விக்கி (29) என்பவருக்கு பிடிக்கவில்லை. கடந்த 27ம் தேதி விக்னேஷ் கடன் கொடுத்த லட்சுமியின் வீட்டிற்கு சென்று மிரட்டியதுடன் சேலையை பிடித்து இழுத்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து மிரட்டிவிட்டு சென்றுள்ளார். புகாரின்படி, பாண்டிபஜார் போலீசார் விக்னேஷ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: