சம்மன் கொடுக்க சென்ற காவலருக்கு சரமாரி அடி

பெரம்பூர்: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணிபுரிபவர் லட்சுமணன் (31). இவர், காவல் நிலைய நீதிமன்ற பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில், ஒரு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர், ஆர்.வி.நகர், ஐயப்பன் கோயில் தெருவில் வசிக்கும் வரலட்சுமி என்ற பெண்ணுக்கு நீதிமன்ற சம்மன் வழங்குவதற்காக சென்றிருந்தார். அங்கு பெண்ணுக்கு சம்மன் வழங்குவதை, குடிபோதையில் நின்றிருந்த சதீஷ்குமார் (34) கண்டித்து காவலர் லட்சுமணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் முற்றியதில், காவலரை சதீஷ்குமார் கட்டை மற்றும் கைகளால் சரமாரி தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் காவலர் லட்சுமணன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் லட்சுமணன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சதீஷ்குமார் குறித்து தீவிரமாக விசாரித்தனர். அதில், அவர் மீது கொடுங்கையூர், வண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து சதீஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: