தரமணி, கோயம்பேடு அரசு அதிகாரிகளை மிரட்டிரூ20 லட்சம் பணம் பறிக்க முயன்ற போலி லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் கைது

* சிசிடிவி கேமரா பதிவு ஆய்வில் பிடிபட்டார்

* வட்டிக்கு விட்ட பணம் வராததால் விபரீத ஆசை

வேளச்சேரி: தரமணி மற்றும் கோயம்பேட்டில் அரசு அதிகாரிகளை மிரட்டி ரூ.20 லட்சம் பறிக்க முயன்ற போலி லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அசோகன் (56). இவர் தரமணியில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 23ம் தேதி அலுவலகத்தில் பணியில் இருந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக்கூறிக்கொண்டு ஒரு நபர் வந்தார். அப்போது, ‘உங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு 10க்கும் மேற்பட்ட  புகார்கள் வந்துள்ளன. அதை சரி செய்வதற்கு ₹10 லட்சம் ரூபாய்  லஞ்சம் தர வேண்டும்’’ என்று நேரடியாக கேட்டுள்ளார்.

இதனால் பயந்துபோன அசோகன் பணம் கொடுக்க வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் இதற்கிடையே, அதிகாரியின் மனைவிக்கு அந்த நபர் மீது சந்தேகம் வரவே போலீஸ் துறையில் பணியாற்றும் உறவினரான உயர் அதிகாரி ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது போலீசார் அசோகனின் போன் நம்பரில் பேசி அந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலி அதிகாரியிடம் கொடுக்க சொல்லி கூறியுள்ளனர். இதனால், பயந்துபோன போலி அதிகாரி திங்கட்கிழமை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கி சென்று விட்டார். இச்சம்பவம் குறித்து அதிகாரி அசோகன் தரமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதேபோல், கோயம்பேட்டில் உள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரியையும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் என கூறி ஏமாற்றியது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், தரமணி போலீசார் தரமணி, நீர்வளத்துறை அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் அதில் கிடைத்த அங்க உருவம் மற்றும் செல்போன் டவர் லொகேசனை வைத்து செல் எண் ஆகியவற்றை கண்டறிந்தனர். பின்னர் அந்த நபர் தாம்பரம் அருகே மாடம்பாக்கம், திருமலை நகர், 3வது தெருவை சேர்ந்த சென்னய்யன் (53) என தெரியவந்து. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னய்யன் வீட்டிற்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ெதாடர்ந்து, அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். ஒன்பதாவது வரை மட்டுமே சென்னய்யன் படித்துள்ளார். இவர்கள் குடும்பம் பல தலைமுறைகளாக வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளது. அதனால் இவரும் வட்டிக்கு விடும் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். கடந்த கொரோனா காலத்தில் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காததால் பல லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனை சரி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பல லட்சம் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் என வரும் செய்திகளை படித்து விட்டு அதே வழியை தேர்வு செய்ததாகவும், அதேசமயத்தில் தானும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல் இருப்பதால் அதில் குதித்ததாகவும் போலீசாரிடம்  கூறினார். கோயம்பேட்டிலும் அதே பாணியில் அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: