கொடுங்கையூர் மேஸ்திரியை கொன்றுவிட்டு நண்பரை சிக்க வைக்க திட்டம் தீட்டிய பக்கத்து வீட்டுக்காரர்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

பெரம்பூர்: கொடுங்கையூரில் மேஸ்திரி கொலை வழக்கில் நண்பரை மாட்டிவிட  கைதான பக்கத்து வீட்டுக்காரர் சதி திட்டம் தீட்டியதும் அம்பலத்திற்கு வந்துள்ளது. கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை ஆதிவாசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (47), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பெரியநாயகி (38) மற்றும் இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் காலை ஜெயபால் குடும்பத்தினர் வெளியே சென்று விட்டனர். ஆனால், வேலை இல்லாததால் காலையிலேயே ஜெயபால் வீட்டில் மது அருந்திவிட்டு தனியாக இருந்து உள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் ஆகியோர் ஜெயபால் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கொடுத்த தகவலை தொடர்ந்து, கொடுங்கையூர் போலீசார் ஜெயபால் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பிரேத பரிசோதனையில், அவரது கழுத்தின் அருகே காயம் இருந்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் மற்றும் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ஜெயபால் தூக்கில் தொங்கியபோது முதலில் பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆறுமுகம் (40) மற்றும் கொடுங்கையூர் சேலைவாயில் பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில், ஜெயபாலின் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுமுகமும், ஜெயபாலும் மேஸ்திரி வேலை செய்து வந்ததும், இருவரும் தங்களது ஆட்களுடன் வேலைக்கு செல்லும்போது ஆறுமுகத்தை விட ஜெயபால் கூலி குறைவாக வாங்கி வந்ததால் ஆறுமுகத்தின் பில்டர்கள் பலர் ஜெயபாலுக்கு தொடர்ந்து வேலை கொடுத்து வந்துள்ளனர்.

இதனால், ஆத்திரத்தில் ஆறுமுகம் போதையில் வீட்டில் இருந்த ஜெயபாலை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தற்கொலை செய்ததுபோல தூக்கு மாட்டி விட்டு சடலத்தை மேலே தூக்கி கட்ட முடியாததால் நாற்காலியில் அமர்ந்தவாறு செட்அப் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தியபோது, நண்பர் ரமேஷ் தான் ஜெயபாலை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், தான் கைகளை மட்டுமே பிடித்ததாகவும் போலீசாரிடம் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். ஆனால், ரமேஷ் போலீசாரிடம், சத்தியமாக நான் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை. ஜெயபால் மூச்சு பேச்சு இல்லாமல் உள்ளதாக ஆறுமுகம் கூறியதால்தான் உள்ளே சென்று பார்த்தேன் எனக்கூறி கதறி அழுதுள்ளார்.

பின்னர் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஆறுமுகம் மட்டும் உள்ளே சென்று வருவதும், அதன் பின்னர் அவர் கூச்சலிடும் போது தான் ரமேஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஜெயபால் வீட்டுக்குள் உள்ளே செல்வதும் தெளிவாக தெரிந்தது. இதையடுத்து, தங்களது ஸ்டைலில் போலீசார் விசாரணை செய்தபோது ஆறுமுகம் உண்மையை ஒப்புக்கொண்டார். ஏற்கனவே, ரமேஷுக்கும் கொலை செய்யப்பட்ட ஜெயபாலுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. அதனால் ரமேஷை சிக்க வைத்து விட்டால் தான் கொலை வழக்கில் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்து நாடகம் ஆடியதாக ஆறுமுகம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தீவிர விசாரணைக்கு பிறகு போலீசார், ஒருவழியாக ரமேஷை அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட ஆறுமுகத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: