பெண் கிடைக்காததால் திருமணம் தாமதம் வயதானவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல் சிக்கியது: புதுப்பெண் அனுப்பிய வாய்ஸ் மெசேஜால் அம்பலமான ஏமாற்று திட்டம்; கோபி அருகே 3 பேரை போலீசில் பிடித்து கொடுத்த நெசவு தொழிலாளி

கோபி: திருமண கமிஷன் பணத்துக்காக வயதானவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல் சிக்கியது. அந்த கும்பலில் 3 பேரை கோபி அருகே நெசவு தொழிலாளி போலீசில் பிடித்து கொடுத்தார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே தாசப்பகவுண்டன் புதூரை சேர்ந்த செல்வராஜ், கண்ணம்மாள் தம்பதி மகன் சரவணன் (35). கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறார். அவருக்கு பெற்றோர் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினர். பல ஆண்டுகளாக பெண் கிடைக்காததால் திருமணம் தாமதம் ஆனது. இதனால், புளியம்பட்டி, பரிசாபாளையத்தை சேர்ந்த மலர், அந்தியூரை சேர்ந்த மற்றொரு பெண், கோபியை சேர்ந்த தங்கமணி, திண்டுக்கல்லை சேர்ந்த முத்துக்காளை, சாத்தூரை சேர்ந்த முத்து, விருதுநகர் மாவட்டம் சூளைக்கரையை சேர்ந்த விஜயலட்சுமி, கவுந்தப்பாடியை சேர்ந்த பாப்பாள்,  ஈரோட்டை சேர்ந்த சரவணன் ஆகிய 8 புரோக்கர்களை குடும்பத்தினர் நாடினர்.

இறுதியில் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த சரிதா (27) என்பவரை சரவணனுக்கு பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. பெண் பார்க்கும்போது சரவணனுக்கு சரிதாவை பிடித்தது. அவரது குடும்ப பின்னணி குறித்து கேட்டபோது தாய், தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், அவருக்கு அவரது பெரியம்மாள் விஜயலட்சுமி (60) ஆதரவாக உள்ளார் என்றும் கூறப்பட்டது. கடந்த 20.8.2022 அன்று   சரவணன் தனது சொந்த ஊரில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் சரிதாவை திருமணம் செய்தார். திருமணம் முடிந்ததும் புரோக்கர் 8 பேருக்கும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கமிஷனாக சரவணன் கொடுத்தார். மனைவி கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தார். இப்படியே சில வாரங்கள் ஓடின.

ஒருநாள் மனைவியின் செல்போனை ஏதேச்சையாக சரவணன் பார்த்தார். அதில் அவரது பெரியம்மாள் விஜயலட்சுமிக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜை கேட்டார். அதில், ‘‘இங்கு இருந்தால் 10 பைசா சேர்க்க முடியாது. நீ ஏதாவது சொல்லி என்னை ஒரு வாரத்துக்கு அழைத்துச்செல். நான் உடனே ஓடிப்போனா இவர் ஏதாவது பண்ணினாலும் பண்ணிக்குவார். ரொம்ப பாசமாக இருக்காரு. அதனால் விட்டுட்டு போகவும் மனசு  இல்லை. இப்போதைக்கு கொஞ்ச நாள் போகட்டும். அப்புறம் சொல்லிக்கலாம் என்ற  முடிவில் இருக்கேன். அடுத்த ஆள் விபரம் தெரியாதவனாக அல்லது வயதானவனாக பாரு. திருமணமான 2 நாளில் எஸ்கேப் ஆகிற மாதிரி இருக்கணும்’’ என்று பேசியிருந்தார்.

இதைக்கேட்ட சரவணன் அதிர்ச்சியில் உறைந்துபோனார். மனைவி மோசடி கும்பலை சேர்ந்தவர் என்பதை அறிந்த அவர் ஒரு வாரமாக விரக்தியில் இருந்தார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் கேட்டபோது நடந்தவற்றை கூறினார். அவர்கள் சரவணனுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி வாய்ஸ் மெசேஜ் குறித்து சரவணன் எதுவும் காட்டிக்கொள்ளாமல், சரிதாவிடம் நண்பருக்கு பெண் பார்க்க வேண்டும். உனது பெரியம்மாளை பார்க்கச்சொல் என்று கூறினார்.

அதன்படி சரிதா தனது பெரியம்மாளிடம் இது குறித்து தெரிவித்தார். அவர் கணவரை பிரிந்ததாக ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பி வைத்தார். ‘‘நண்பருக்கு பெண் பிடித்துவிட்டது. மணப்பெண்ணை அழைத்து வந்தால் எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம்’’ என்று சரவணன் கூறினார். அதன்படி ரூ.80 ஆயிரம் கமிஷன் பேசப்பட்டது. இதனையடுத்து விருதுநகரில் இருந்து நேற்று முன்தினம் விஜயா (36) என்ற பெண்ணை வாடகை காரில் பெரியம்மாள் விஜயலட்சுமி, தாசப்பகவுண்டன் புதூருக்கு அழைத்து வந்தார். அவர்களை நண்பர்களுடன் சேர்ந்து சரவணன் பிடித்தார்.

திருமணம் செய்ய வந்த பெண்ணை விசாரித்தபோது அவர் கரூர் மாவட்டம் திருமாநல்லூரை சேர்ந்த அர்சுணன் மனைவி விஜயா (36) என்பது தெரியவந்தது. சரிதா உள்பட 3 பேரிடம் இருந்த செல்போனை வாங்கி விசாரித்தபோது இவர்கள் பெண் கிடைக்காதால் திருமணம் தாமதமாகி விரக்தியில் இருக்கு  வயதான வாலிபர்களையும்,  மனைவியை இழந்த வயதானவர்களையும் குறிவைத்து திருமண கமிஷனுக்காக இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. சரவணனை திருமணம் செய்த வகையில் சரிதாவுக்கு ரூ.20 ஆயிரம் கிடைத்துள்ளது. மற்ற 8 பேரும் ஒரு லட்ச ரூபாயை பிரித்துள்ளனர்.

இதனையடுத்து மோசடி கும்பல் குறித்து  சரவணன், பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேரையும்  போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். சரிதா ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரை இதேபோன்று மோசடியாக ஏமாற்றி திருமணம் செய்து இரண்டரை லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியதும், அந்த டிரைவர் சரிதாவை தேடி கண்டுபிடித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டு, வெளியே தெரிந்தால் அவமானம் என்று விரட்டிவிட்டதும் தெரிய வந்தது. சரவணனின் நண்பருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அழைத்து வந்த கரூர் மாவட்டம் திருமாநல்லூரை சேர்ந்த அர்சுனன் மனைவி விஜயாவிற்கு 21 வயதில் ரட்சனா என்ற மகளும், திலீப் (19) என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. இவர்கள் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளனர்? இந்த மோசடி கும்பலில் எத்தனை பேர் உள்ளனர்? என்பதை கண்டறிய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: