புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை வறுத்தெடுக்கும் பாஜ எம்எல்ஏக்கள்: வீடியோ வைரல்- பரபரப்பு

புதுச்சேரி: பாஜ எம்எல்ஏக்கள் முதல்வர் ரங்கசாமியை வறுத்தெடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. என்.ஆர் காங்கிரஸ்- பாஜ எம்எல்ஏக்கள் சபாநாயகருடனான பேச்சுவார்த்தைக்கு முன்பாக பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் எம்எல்ஏக்கள்  கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட்ஜான்குமார், பாஜ ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர், கோலப்பள்ளி அசோக், ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அதில் முதல்வரின் செயல்பாடுகள் குறித்து பாஜ எம்எல்ஏக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுவதும் பதிவாகியுள்ளது. வீடியோவில் பேசிய அங்காளன், மறு தேர்தல் வைக்கிறோம் நிக்க முடியுமா? என என். ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கேட்கின்றனர். 30 தொகுதிகளையும் கலைத்துவிட்டு வையுங்கள் பார்க்கலாம். யார்? வேண்டாம் என்று சொன்னது. அப்படி தேர்தல் நடந்தால் யார், யார் காலில் விழுந்து ஜெயித்தார்கள் என்று, சுய பரிசோதனை செய்து கொள்ள முடியும். என்னுடைய தொகுதியில் ஒரு வேட்பாளரை போட்டு, தற்போதைய முதல்வர் பிரசாரம் செய்தார்.

அப்புறம் என்னால்தான் ஜெயித்தீர்கள் என்று சொல்றீங்க. அப்போது பேசிய ஜான்குமார், பிஜேபி எம்எல்ஏக்களை அரவணைத்து சென்றால் ஆட்சி மிகச்சிறப்பாக நடக்கும். முதல்வர் ரங்கசாமி ஆதரிக்கும் சுயேச்சை மற்றும் எதிர்க்கும் எதிர்கட்சியினருக்கு கார் வழங்குகிறார். ஆனால் பாஜவை ஆதரிக்கும் காரணத்தால் எதுவும் கிடைக்கவில்லை. இப்படி செய்வதன் மூலம் அவர் தன்னுடைய நோக்கப்படி தனக்கான ஆதரவை 13 என அதிகரித்துக்கொள்கிறார். இதே முதல்வருக்குதானே ஆதரவு கொடுக்கிறோம். குறைந்தபட்சம் பாஜவுக்கு ஆதரவு தரும் சுயேச்சைகளுக்கு சேர்மன் உள்ளிட்ட பதவிகளை தர வேண்டாமா? என்றார்.

அதற்கு பதிலளித்து பேசிய அங்காளன், சேர்மன் எல்லாம் வேண்டாம், குறைந்தபட்சம் மரியாதையாக நடத்த வேண்டாமா? என கேட்கிறார். அவரை தொடர்ந்து பேசிய கல்யாணசுந்தரம், தேர்தலில் கூட்டணிக்கு புறம்பாக  எனக்கு எதிராக ஒருவரை முதல்வர் நிறுத்தினார். அவரால் ஜெயிக்க முடிந்ததா? அவருக்கு கோயிலில் வேட்பு மனுவை படைத்து கொடுத்தார் என குமுறுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையெல்லாம் வைத்து பார்க்கும்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் பிணக்கு ஆரம்பித்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆட்சியில் பங்கெடுத்தாலும் உரிய பங்கீட்டை கொடுக்காததால் இப்பிரச்னை விசுவரூபமாக மாறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related Stories: