ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் முறையிட முடியும்: ஐகோர்ட் விளக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி விசிக தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முறையீட்டை தனி நீதிபதி இளந்திரையன் ஏற்கவில்லை.  இந்த விவகாரம் தொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் திருமாவளவன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், மேல் முறையீடு மனுதான் தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருமாவளவன் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் நேற்று திருமாவளவன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும். சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று விளக்கம் அளித்தனர்.

Related Stories: