போலீசாரின் முக்கிய குடும்ப நிகழ்வுகளுக்கு விடுப்பு தர வேண்டும்: உயரதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக சந்தானராஜ் உள்ளார். இவரது மகளின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வாரம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மகளின் நிச்சயதார்த்த நடைபெறும் அன்று உயரதிகாரி சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தானராஜூக்கு விடுப்பு கொடுக்கவில்லை. இதனால் சந்தானராஜ் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நின்றது. இதுகுறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தானராஜ் தனது ஆதங்கத்தை காணொலி வாயிலாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கவனத்துக்கு கொண்டு சென்றார். அதைதொடர்ந்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தானராஜூக்கு நேற்று கடிதம் ஒன்று அனுப்பினார்.

அந்த கடிதத்தில் டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருப்பதாவது: ‘தங்களது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும், அதில் கலந்து கொள்ள தங்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டதும் காணொலி வாயிலாக கண்டறிய நேர்ந்தது. தங்களின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இதுபோன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் விடுப்பு மறுக்க கூடாது என்பதை மேலதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. வரும் நாட்களில் தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்த ஏதுவாக போதுமான நாட்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: