அறநிலையத்துறை வரலாற்றில் முதல்முறையாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலை ரூ.300 கோடியில் மேம்படுத்தும் பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். அறநிலையத்துறை வரலாற்றில் முதல் முறையாக ரூ.300 கோடியில் பிரமாண்ட அளவில் திருப்பணி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டப்பேரவையில், 2021-22ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் “திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்” என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, முழுமையான திருப்பணிகள் மற்றும் இதர பணிகள் பெருந்திட்ட வரைவு திட்டத்தின்படி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கோயிலில், உபயதாரர் வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் ரூ.200 கோடி மதிப்பீட்டில், கோயில் உட்கட்டமைப்பு மற்றும் கோயில் நிர்வாகத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வு அறை ஏற்படுத்துதல், பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை, தீத்தடுப்பு கண்காணிப்பு, முடிக்காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், திருக்கோயில் வளாகத்தில் சாலை வசதி ஏற்படுத்துதல் ஆகிய மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன.

கோயில் நிதி மூலமாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் பயன்பாட்டிற்கான தங்கும் விடுதிகள், சலவைக் கூடம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்பு கட்டடம், பணியாளர் குடியிருப்பு, திருக்கோயிலின் கிழக்கு கடற்கரை பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் ஆகிய மேம்பாட்டுப் பணிகள், என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட 1951 ம் ஆண்டு முதல் இதுநாள் வரை இவ்வாறான மிகப்பெரிய திருப்பணி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: