சென்னை மழையால் 13 விமானங்கள் தாமதம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையிலிருந்து மதியம் வரையில் வெயில் கொளுத்தியது. ஆனால், பிற்பகல் 3.30 மணியில் இருந்து திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது. இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில், தரையிறங்க வந்த விமானங்களளும் நீண்டநேரமாக வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தன. திருச்சி, புனே, கொல்கத்தா, டெல்லி, மதுரை, பெங்களூரூ ஆகிய நகரங்களில் இருந்து, சென்னைக்கு வந்த 6 விமானங்கள், தரையிறங்காமல் நீண்ட நேரமாகவே வானில் வட்டமடித்து பறந்துகொண்டிருந்தன. அதன்பின்பு மழை ஓய்ந்ததும் அந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, சென்னையில் தரையிறங்கின.

இதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விசாகப்பட்டினம், கவுகாத்தி, கொல்கத்தா, கோவை, டெல்லி, மதுரை மற்றும் சர்வதேச விமானங்களான இலங்கை ஆகிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இந்த திடீர் மழை இடி, மின்னல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று மொத்தம் 13 வருகை, புறப்பாடு விமானங்கள் தாமதமானது. இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 74 பயணிகளுடன் நேற்று மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு பயணிகள் விமானம் 4.20 மணிக்கு சென்னை வந்தது. ஆனால், சென்னையில் பெய்த திடீர் மழை காரணமாக தரையிறங்க முடியவில்லை. எனவே, அந்த விமானம் பெங்களூருக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

Related Stories: