பண மதிப்பிழப்பு விவகாரத்தில் எதை விசாரிக்க வேண்டும்? மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு விவகாரத்தில் எதையெல்லாம் விசாரிக்க வேண்டும் என மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி திடீரென நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி விசாரணைக்கு வந்தபோது,‘பண மதிப்பிழப்பு திட்டத்திற்கான அரசின் நோக்கம் பாராட்டும் விதமாக இருந்தாலும், மக்கள் படும் அவதி வேதனையாக உள்ளது’ என கருத்து தெரிவித்திருந்தார். இதன்பின்னர், இந்த வழக்கு நிலுவையில் கிடந்தது.

இந்நிலையில், பண மதிப்பிழப்பு தொடர்பான மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், எ.எஸ்.போபண்ணா, ராமசுப்பிரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை விவகாரத்தில் இன்னும் ஏதாவது விசாரிக்கப்பட வேண்டி இருக்கிறதா?. அப்படியென்றால் அதுகுறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதனால் இந்த வழக்கை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் பண மதிப்பிழப்பு தொடர்பாக எதனையெல்லாம் விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தெளிவாக தெரிவிக்கலாம். அதனை பரிசீலித்து அவை அனைத்தையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: