ஒரே எண்ணில் பல போன்கள் விற்கப்படுவதை தடுக்க ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்வது இனி கட்டாயம்: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: இனிமேல் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களின் ஐஎம்இஐ எண்ணை ஐசிடிஆர் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மொபைல் போனுக்கு தனித்தனியாக 15 இலக்க சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் (ஐஎம்இஐ) இருக்கும். மொபைல் திருடு போனால் இந்த எண்ணை வைத்து கண்டுபிடிக்க முடியும். மேலும், பல வழக்குகளில் தலைமறைவான குற்றவாளிகள் பயன்படுத்தும் மொபைலின் இந்த ஐஎம்இஐ எண்ணை வைத்து தான் அவர்களின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடிக்கின்றனர். கடந்த 2020ம் ஆண்டு, உபி மாநிலம் மீரட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சீனா நிறுவனமான விவோ நிறுவனத்தின் 13,500 செல்போன்கள் ஒரே ஐஎம்இஐ எண்ணை கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது போன்ற போலி ஐஎம்இஐ எண் கொண்ட போன்களை குற்றவாளிகள் பயன்படுத்தும் பட்சத்தில், போன் மூலமாக அவர்களை பிடிக்கும் வாய்ப்பு கிடைக்காது. எனவே, இவ்வாறு போலி ஐஎம்இஐ எண் கொண்ட மொபைல் போன்கள் இந்தியாவில் விற்கப்படுவதை தடுக்க ஒன்றிய அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும், முதல் முறையாக போனை விற்கும் முன்பாக எல்லா செல்போன்களின் ஐஎம்இஐ எண்ணையும், இந்திய போலி சாதன தடுப்பு இணையதளத்தில் (ஐசிடிஆர் - https://icdr.ceir.gov.in) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஒன்றிய தொலைதொடர்பு துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட பிராண்டுகளின் இறக்குமதி செய்யப்பட்ட மொபைல் போன்களுக்கு இந்த விதி பொருந்தும்.

Related Stories: