நவராத்திரியை முன்னிட்டு வெங்காயம், பூண்டு இன்றி ரயில்களில் விரத உணவு: ஐஆர்சிடிசி அறிவிப்பு

புதுடெல்லி: நவராத்திரி பண்டிகை கடந்த 26ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் பலரும் வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதம் இருப்பது வழக்கம். அவ்வாறு விரதம் இருப்பவர்கள், விரத காலத்தில் ரயிலில் பயணிக்கும் போதும், அவர்களுக்காக சிறப்பு விரத உணவை வழங்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) ஏற்பாடு செய்துள்ளது. வரும் 5ம் தேதி வரை இந்த உணவுகளை ‘Food on Track’ என்ற ஆப் மூலமாகவும்  https://ecatering.irctc.co.in/ என்ற இணையதளம் மூலமாகவும் ஆர்டர் செய்யலாம். உணவு ஆர்டர் செய்ய ‘1323’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே அமைச்சகம் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது. ‘விராட் தாலி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விரத உணவு மெனுவில் பராத்தா, உருளைக்கிழங்கு பொரியல், ஜவ்வரிசி கிச்சடி, பன்னீர் மக்மாலி போன்ற உணவுகள் இடம் பெற்றுள்ளன. 400 ரயில் நிலையங்களில் இந்த விரத உணவை ஆர்டர் செய்து சாப்பிடலாம். இதன் விலை ரூ.99ல் இருந்து தொடங்குகிறது. மேலும், துர்கா பூஜையை ஒட்டி, மேற்கு வங்க மாநிலத்தில் 70 ரயில் நிலையங்களில் அம்மாநிலத்தின் பாரம்பரிய உணவுகள் அடங்கிய சிறப்பு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: