தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய அக்டோபர் 9ல் திமுக பொதுக்குழு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது என்று கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொதுத் தேர்தலை  முன்னிட்டு முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல்  நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல்  நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளுக்கான தேர்தலும்,  பின்னர் மாநகர கழகங்களுக்கான தேர்தலும் நடைபெற்று முடிந்தது. இதில் புதிய  நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள்,  தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான  தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். இந்த பதவிகளுக்கு போட்டியிட கடந்த வாரம் 4 நாட்களாக அண்ணா அறிவாலயத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதில் 45 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு தற்போதைய மாவட்டச் செயலாளர்களை எதிர்த்து கட்சியினர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது கடந்த 2 நாட்களாக அண்ணா அறிவாலயத்தில் பரிசீலனை நடந்து வந்தது. இதையடுத்து சில மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 7 மாவட்டங்களுக்கு மட்டும், மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்ட திமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் முகாமிட்டு வந்தனர். அவர்கள் மாவட்ட செயலாளர் பதவிக்கு முட்டி மோதி வருவதாக கூறப்படுகிறது. எனினும், திமுக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, அவர் இந்த பட்டியலை இறுதி செய்து உடனடியாக திமுக மாவட்ட செயலாளர் பட்டியலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக, திமுகவின் 15வது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் அக்டோபர் 9ம்தேதி காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்’ நடைபெறும். இக்கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* மாவட்ட செயலாளர் பட்டியல் இன்று வெளியீடு

திமுகவில் கிளை கழகம் முதல் மாவட்டச் செயலாளர் வரை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் கிளை கழக நிர்வாகிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் தற்போது முடிந்துள்ளது. இந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

Related Stories: