ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு: 1.16 கோடி பேர் பயனடைவார்கள்

புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது 34 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதை 38 சதவீதமாக உயர்த்தும்படி ஊழியர்கள் கோரி வந்தனர். இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று  பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வை ஈடுகட்ட, கூடுதல் அகவிலைப்படி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் அளித்த பேட்டியில், ‘ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இது கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும். இதனால், 47.68 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்கள், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர். இந்த அகவிலைப்படி உயர்வால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12,852.56 கோடி கூடுதல் செலவு ஏற்படும்,’ என்று தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மற்ற திட்டங்களின் விவரம் வருமாறு:

* டெல்லி, அகமதாபாத் மற்றும் மும்பை சத்ரபதி சிவாஜி முனையம் ஆகிய 3 முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

* டெல்லி ரயில் நிலையம் அடுத்த மூன்றரை ஆண்டுகளிலும், அகமதாபாத் மற்றும் மும்பை ரயில் நிலையங்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளிலும் புதுப்பிக்கப்பட உள்ளன.

Related Stories: