பல்வேறு புகார்களை தொடர்ந்து பாப்புலர் பிரன்ட் அமைப்புக்கு 5 ஆண்டு தடை: ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: பல்வேறு புகார்களைத் தொடர்ந்து, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் 8 துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டு தடை விதித்து ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதும் தமிழகம் உட்பட 15 மாநிலங்களில், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை சேர்ந்தவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 22ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பல்வேறு புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் அந்த அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் 2வது முறையாக கேரளா, கர்நாடகா, குஜராத் உட்பட 7 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் 8 துணை அமைப்புகளுக்கு சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிஎப்ஐ அமைப்பினர் நிர்வாகிகள் சிலர், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) மற்றும் ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி) ஆகிய அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் இருப்பது விசாரணையில் உறுதியாகி உள்ளது. மேலும், ஐஎஸ்ஐஎஸ் போன்ற சர்வதேச தீவிரவாத குழுக்களுடனும் பிஎப்ஐ தொடர்பு கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் நாட்டில் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்த, பல்வேறு கலவரங்களை தூண்டி உள்ளனர். பிஎப்ஐ அமைப்போடு அதன் துணை அமைப்புகள் தொடர்பில் இருந்து கொண்டு நிதி திரட்டி வழங்குவது, அந்த நிதியை சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்துவதற்கு உதவி செய்து வந்துள்ளன.

இதன் காரணமாக இந்த அமைப்புகளை தடை விதிக்க வேண்டுமென உத்தரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா போன்ற மாநில அரசுகள் பரிந்துரைத்தன. இவற்றை கருத்தில் கொண்டும், சோதனையில் சிக்கிய ஆதாரங்களின் அடிப்படையிலும், பிஎப்ஐ மற்றும் அதன் 8 துணை அமைப்புகள் சட்ட விரோதமானவை என அறிவித்து அவைகளுக்கு உபா சட்டத்தின் கீழ் 5 ஆண்டு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள பிஎப்ஐ அமைப்பு அலுவலகங்கள் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் போராட்டங்கள் நடத்த அந்தந்த மாநில போலீசார் தடை விதித்துள்ளனர். இந்தியாவில் பிஎப்ஐ அமைப்பு கடந்த 16 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

* தமிழகத்தில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நாட்டில் செயல்பட 5 ஆண்டுகள் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அதிவிரைவுப்படை வீரர்கள் உட்பட 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், புரசவைாக்கத்தில் உள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகள் விவரம்

* பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா

* ரிஹாப் பவுண்டேஷன் (ஆர்ஐஎப்)

* கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா (சிஎப்)

* அகில இந்திய இமாம் கவுன்சில் (ஏஐஐசி)

* தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு (என்சிஎச்ஆர்ஓ)

* தேசிய பெண்கள் முன்னணி

* ஜூனியர் முன்னணி

* எம்பவர் இந்தியா அறக்கட்டளை

* ரிஹாப் பவுண்டேஷன், கேரளா

* பாஜ. ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள்,

அலுவலகங்களுக்கு பாதுகாப்பு

பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு 5 ஆண்டு தடை விதித்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் இந்த அமைப்பு செல்வாக்காக உள்ள இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி, மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பாஜ, ஆர்எஸ்எஸ் அலுவலகங்களுக்கும், ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அடுத்தது என்ன நடவடிக்கை?

* உபா சட்டத்தின் கீழ் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அடுத்ததாக நாடு முழுவதும் அந்த அமைப்பின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

* பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளின் வங்கி கணக்குகள் முழுவதுமாக முடக்கப்படும்.

* தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சொந்தமான அலுவலக கட்டிடங்கள், வீடு ஆகிய அசையா சொத்துக்களை ஒன்றிய அரசு பறிமுதல் செய்யும்.

* தடை செய்யப்பட்ட அமைப்புகளின் இணையதளம், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள பக்கங்களையும் முடக்கப்பட்டுள்ளது. இனி இந்தியாவில் இந்த அமைப்புடைய எந்த ஒரு சமூக வலைதள பக்கங்களும் இயங்காது. இந்த அமைப்பின் தகவல் பரிமாற்றம் மற்றும் பிரச்சாரங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த 5 ஆண்டு தடையை தேவைப்பட்டால் ஒன்றிய அரசு நீட்டிக்கவும் சட்டத்தில் இடமுண்டு.

* பிஎப்ஐ அமைப்பு கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி தொடங்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்குப் பிறகு 1993ல் தேசிய வளர்ச்சி முன்னணி (என்பிஎப்) அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பும், கர்நாடகா பாரம் ஆப் டிகினிட்டி அமைப்பும் இணைந்து பிஎப்ஐ உருவாக்கப்பட்டது.

* இந்த அமைப்பின் நிர்வாகிகளை ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் 2013ம் ஆண்டில் இருந்தே கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். கடந்த 2019ல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உபி.யில் நடந்த போராட்டம், வன்முறையில் பிஎப்ஐ தீவிரமாக ஈடுபட்டிருந்தது கண்காணிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே இந்த அமைப்பை தடை செய்ய உபி அரசு ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது.

* பிஎப்ஐ அமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என கூறி உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாசுதீன் ஓவைசி, ஏற்கனவே அந்த அமைப்பின் செயல்பாடுகளை தான் எதிர்த்து வந்ததாக கூறி உள்ளார்.

* அஜ்மீர் தர்கா மத தலைவர் ஜைனுல் அபேதின் அலி கான், பிஎப்ஐ அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள 5 ஆண்டு தடையை வரவேற்றுள்ளார்.

* பிஎப்ஐ அமைப்பின் அரசியல் அங்கமான எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் எம்.கே.பைசி விடுத்துள்ள அறிக்கையில், ‘ஒன்றிய  அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல். அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், மக்களும் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கவும், அரசியலமைப்பின் ஜனநாயகம் மற்றும் மதிப்புகளை காக்கவும் தங்களை அர்ப்பணிக்க  வேண்டும்’ என அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: