காட்சிப்பொருளாக உள்ள தண்ணீர் தொட்டி: மக்கள் அவதி

சின்னாளபட்டி: பாளையன்கோட்டை ஊராட்சி காமன்பட்டியில் சிறுமின்விசை தண்ணீர்தொட்டி பயன்பாடின்றி உள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் அவதியடைந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர்ஒன்றியம், பாளையன்கோட்டை ஊராட்சியில் பாளையன்கோட்டை, கூலாம்பட்டி, பிரவான்பட்டி, காமன்பட்டி உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. காமன்பட்டியில் இருந்து புது காமான்பட்டி செல்லும் வழியில் சிறுமின்விசை தண்ணீர் தொட்டி உள்ளது. உரிய பராமரிப்பில்லாததால் இந்த தொட்டியில் நீரேற்றும் மின்மோட்டார்களை பழுதடைந்துள்ளது. இதனால் தண்ணீர் தொட்டி பயன்பாடின்றி உள்ளது.

இதன் காரணமாக இந்த தண்ணீர் தொட்டி பகுதி மாட்டுத் தொழுவமாக மாறி வருகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த ஆழ்துளை கிணறு செயல்படாமல் உள்ளது. பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், ஊராட்சி செயலரிடமும் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆழ்துளை கிணறை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

Related Stories: