நாகர்கோவில் அருகே 2வது நாளாக மூடிக்கிடக்கும் ரயில்வே கேட்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே 2வது நாளாக ரயில்வே கேட் பழுதாகி மூடிய நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ெபரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நாகர்கோவில், பார்வதிபுரம் அருகே கணியாகுளம் ஊராட்சிக்கு உள்பட்ட இலந்தையடி, கணியாகுளம், பாறையடி போன்ற பகுதிக்கு செல்ல சாலை வசதி உள்ளது. அந்த வழியாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையும் அமைந்துள்ளது. இந்த சாலையில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்கள் செல்கின்ற நேரத்தில் மட்டும் இந்த கேட் மூடப்பட்டிருக்கும். மற்ற நேரங்களில் பொதுமக்கள், வாகனங்கள் செல்ல வசதியாக கேட் திறந்திருப்பது வழக்கம். இதற்காக ரயில்வே பணியாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இரவு முதல் இந்த ரயில்வே கேட் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென்று மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது. ரயில் சென்ற பிறகு திறக்கப்பட வேண்டிய நிலையில் தொடர்ந்து மூடப்பட்டே இருந்தது. கேட் லாக்காகி இருந்ததால் அந்த வழியாக வந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பொதுமக்கள் வீபரீதத்தை அறியாமல் தண்டவாளத்தை நடந்து கடந்தனர். ஆனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர். பலர் திரும்பி வேறு வழியாக சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவிய வண்ணம் இருந்தது. இன்று காலையும் ரயில்வே கேட் சீர் செய்யப்படவில்லை. இதனால் ரயில்வே கேட் முன்பகுதியில் தடுப்பு வைத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

 

இதுகுறித்து நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில் நுட்ப பணியாளர்கள் வந்து ரயில்வே கேட் பழுதை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே கடந்த 2 தினங்களுக்கு முன்னரும் இதனை போன்று ரயில்வே கேட் பழுதாகி சீர் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பழுதடைந்துள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரயில்வே கேட்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: