சென்னை மாநகரில் 28 சட்டமன்றத் தொகுதிகளில் ரூ.360.63 கோடி மதிப்பில் 2,488 வளைய சுற்றுத்தர அமைப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகருக்கு உட்பட்ட 28 சட்டமன்றத் தொகுதிகளில்  ரூ.360.63 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2,488 வளைய சுற்றுத்தர அமைப்புகள் (Ring Main Unit)  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 28.09.2022 எரிசக்தித் துறை சார்பில் சென்னை செவாலியே சிவாஜிகணேசன் சாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வளைய சுற்றுத்தர அமைப்பினை (Ring Main Unit) தொடங்கி வைத்ததோடு, சென்னை மாநகர் மற்றும் புறநகர் உட்பட்ட 28 சட்டமன்ற தொகுதிகளில் ரூ.360.63 கோடி மதிப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 2,488 வளைய சுற்றுத்தர அமைப்புகளையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்துள்ளார்.  

 

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, சேப்பாக்கம், எழும்பூர், துறைமுகம், கொளத்தூர், மாதவரம், மதுரவாயல், மைலாப்பூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், திரு.வி.க.நகர், திருவெற்றியூர், ஆயிரம்விளக்கு, வில்லிவாக்கம், விருகம்பாக்கம், ஆலந்தூர், பூவிருந்தவல்லி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய 28 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் ரூ.787 கோடி மதிப்பீட்டில் விநியோக மின்மாற்றிகள் மற்றும் மின்வழிப் பாதைகளுக்கு புதியதாக 5,692 வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் (RMU) நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இவற்றுள், ஏற்கனவே 216 வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் (RMU) ரூ.31.31 கோடி செலவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கொளத்தூர், சேப்பாக்கம், சைதாப்பேட்டை, துறைமுகம், ஆலந்தூர், ஆவடி, அண்ணா நகர், எழும்பூர், மயிலாப்பூர், பெரம்பூர், ஆர்.கே. நகர், இராயபுரம், தி. நகர், திரு.வி.க. நகர், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், ஆகிய 28 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 2,488 வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் (RMU) ரூ.360.63 கோடி செலவில் நிறுவும் பணிகள் முடிவுற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த வளைய சுற்றுத்தர கருவி அமைப்பதன் மூலம், மழைக்காலங்களில் ஏற்படும் மின்விபத்தினை தவிர்க்க முடியும்.  மேலும், ஒவ்வொரு வளைய சுற்றுத்தர கருவியும் குறைந்தபட்சம் இரு மின்வழிப் பாதைகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால், ஏதேனும் ஒரு மின்பாதையில் பழுது ஏற்பட்டாலும் மற்றொரு மின்வழிப் பாதையின் மூலம் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க முடியும். இதனால் பொதுமக்களுக்கு மின்தடையினால் ஏற்படும் அசௌகரியங்கள் வெகுவாக குறைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மின் வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் அனைத்தும் SCADA சிஸ்டம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால் தலைமையிடத்தில் இருந்தே இக்கருவிகளை இயக்க முடியும். இதனால் மின்சாரம் எடுத்துச் செல்லும் கேபிள்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டாலும் கூட அதனை உடனே கண்டறிந்து துரிதமாக சரி செய்யவும் முடியும் என்று தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு,  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா. எழிலன், துணை மேயர் மு. மகேஷ் குமார்,  மாமன்ற நிலைக்குழுத் தலைவர் என். சிற்றரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி இ.ஆ.ப., இயக்குநர் பகிர்மானம் மா.சிவலிங்கராஜன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: