பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கொடுமைப்படுத்துகிறார்: மாஜி டிஜிபி திலகவதி மகன் மீது மருமகள் சேலம் போலீசில் புகார்

சேலம்: பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி தமிழக மாஜி டிஜிபி திலகவதியின் மகன் மீது மருமகள் சேலம் போலீசில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் பிரபு திலக் (48). இவரின் மனைவி சுருதி திலக் (40). இவரின் பெற்றோர் வீடு சேலம் அழகாபுரம் பிருந்தாவன ரோட்டில் உள்ளது. இன்று சுருதி திலக், தனது தந்தை கண்ணுசாமியுடன் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

இதன்பின்னர் அவர் கூறியதாவது; எனக்கும் முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் டாக்டர் பிரபு திலக்கிற்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு 14 மற்றும் 7 வயதில் குழந்தைகள் உள்ளனர். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கல்லூரியில் எனது கணவர் பேராசிரியராக பணியாற்றினார். ஆரம்பம் முதலே அவரின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. குழந்தை களுக்காக பொறுத்துக்கொண்டேன். எனது கணவருடன் பணியாற்றி வந்த பெண் டாக்டருக்கும் கணவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண் டாக்டர், குடும்ப நண்பர் என்பதால் ஆரம்பத்தில் எனக்கு எதுவும் தெரியாது. ஒருநாள் கணவருடன் வீட்டுக்கு வந்த அந்த பெண் டாக்டர் மது குடித்து இருந்தார். பின்னர் நள்ளிரவில் பார்த்தபோது எனது கணவரும் அந்த பெண் டாக்டரும் தவறான உறவில் இருந்தனர். இதனால் நான் கடும் அதிர்ச்சி அடைந்தேன்.

வெளியே சொன்னால், எங்களின் மானம் போய்விடும் என இருவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டனர். இதுகுறித்து எனது மாமியார் திலகவதியிடம் தெரிவித்தேன். எனது மகனுக்கு எது சந்தோஷம் தருமோ, அவன் அப்படியே இருப்பான். அதனை அனுசரித்து செல்ல வேண்டும் என அவர் என்னிடம் தெரிவித்தார். அதன்பிறகு நாங்கள் சென்னை வந்து வசித்து வருகிறோம். சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் எனது கணவர் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

 அந்த பெண் ஆஸ்திரேலியாவில் 6 மாதமும், தமிழகத்தில் 6 மாதமும் இருப்பார். அந்த பெண்ணுக்கு எங்களது வீட்டின் மாடியிலேயே வாடகைக்கு குடியிருக்க வைத்தார். நான் நட்பாக பழகி வருகிறார் என நினைத்தேன். அந்த பெண்ணுடனும் தவறான தொடர்பு வைத்துக்கொண்டார். இதனை கண்டித்த என்னை அடித்து துன்புறுத்தினார். கடந்த டிசம்பர் மாதம் அவர் என்னை அடித்ததில் முகம் வீங்கியது. இதுகுறித்து சென்னை போலீசாருக்கு தெரிவித்தேன். அவர்களும் வந்து விசாரித்தனர். மனைவியை தெரியாமல் அடித்து விட்டேன் என மன்னிப்பு கேட்டதால் விட்டு விட்டனர்.

மீண்டும் அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி சேலத்தை சேர்ந்த டாக்டருடன் தொடர்பில் உள்ளார். அந்த பெண் டாக்டரின் அறிவுரையின்பேரில் என்னை அடித்து கொடுமைப்படுத்தினார். நான் வக்கீலுக்கு படித்து இருப்பதால் சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றி வருகிறேன். எனது நண்பர்களுக்கு போன் போட்டு மிரட்டுகிறார். அவருடைய கொடுமை தாங்க முடியாமல் தற்போது குழந்தைகளுடன் சேலத்தில் உள்ள எனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளேன். வால்டர் என்ற சினிமாவை அவர் தயாரித்தார்.

வரதட்சணையாக பணம் வாங்கி வரவேண்டும் என கொடுமைப்படுத்தினார். பின்னர் படம் தயாரிக்க எனது தந்தை சேலம் வீட்டை அடமானம் வைத்து 1 கோடி ரூபாய் கொடுத்தார். தற்போது அவராலும் போலீஸ் அதிகாரியாக இருந்த மாமியார் திலகவதியினாலும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வரும் அதிகாரிகளை அவர் மிரட்டி விடுகிறார்.

இதனால் எனது உயிருக்கும் குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு தர வேண்டும். திருமணத்தின்போது கொடுத்த 170 பவுன் நகை, 1 கோடி ரூபாய் ஆகியவற்றை திருப்பி தர வேண்டும். என்னை அடித்து கொடுமைப்படுத்திய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: