தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகள் திருட்டு: அதிமுக பிரமுகர் வீடு முற்றுகை

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டியை சேர்ந்தவர்கள் கந்தசாமி, ராஜேந்திரன். விவசாயிகளான இவர்களுக்கு அங்குள்ள ஏரிக்கரையின் அருகே தோட்டங்கள் உள்ளன. அங்கு தலா 2 பசுக்களை வளர்த்து வருகின்றனர். தோட்டத்தில் உள்ள கொட்டகை தொழுவத்தில் இரவில் பசுக்களை கட்டி வைப்பார்கள். நேற்று மாலை கந்தசாமி, ராஜேந்திரன் ஆகியோர் தோட்டத்துக்கு சென்று பணிகளை முடித்து இரவு வீட்டுக்கு வந்தனர். இன்று அதிகாலை தோட்டத்துக்கு மாடுகளுக்கு தீவனம் போடுவதற்காக சென்று பார்த்தபோது 2 தோட்டத்திலும் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த 4 பசு மாடுகளையும் காணவில்லை. இதுசம்பந்தமாக கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்சென்றனர்.

இதனிடையே மாடுகளை பறிகொடுத்த விவசாயிகள் உறவினர்களுடன் திட்டக்குடியில் இன்று நடைபெறும் மாட்டு சந்தைக்கு காரில் விரைந்தனர். வீரனூர் பகுதியில் சிலர் மாடுகளை வேறு வண்டிகளில் மாற்றி ஏற்றிச் சென்றதாக தகவல் கிடைத்தது. இதுபற்றி விசாரித்தபோது கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவரின் மினி லாரியில் மாடுகளை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து மினிலாரியின் உரிமையாளரை தொடர்பு கொண்டு விசாரித்த போது வண்டியில் ஜிபிஎஸ் கருவி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மினி லாரியின் டிரைவரை தொடர்பு கொண்டு விசாரித்து, முதலில் தனது வண்டியில் 4 மாடுகளை ஏற்றி வந்ததும் பின்னர் வீரகனூரில் இருந்து வேறு 2 வாகனத்தில் ஏற்றி திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த வியாபாரியிடம் விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து விவசாயிகள் மணப்பாறைக்கு விரைந்து சென்றபோது விவசாயிகளை பார்த்ததும் ஒரு வாகனத்தில் திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் தப்பியோடி விட்டனர். மற்றொரு மினி லாரி, 4 மாடுகளை விவசாயிகள் மீட்டனர். இந்த மாடுகள் திருட்டில் அதிமுகவை சேர்ந்த கெங்கவல்லி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் மருதமுத்துவின் பேரன் கரிகாலன் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மருதமுத்துவின் வீடு முன் கந்தசாமி, ராஜேந்திரனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் கடந்த சில மாதங்களில் மாடு, கோழி, ஆடுகளை திருட்டில் பறிகொடுத்தவர்களும் திரண்டதால் பரபரப்பு நிலவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தப்பிச்சென்ற கரிகாலன் மற்றும் அவரின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: