சென்னையில் அக். 2ல் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடக்கும் மனித சங்கிலியில் திராவிடர் கழகம் பங்கேற்கும்: கி.வீரமணி அறிவிப்பு

சென்னை: சென்னையில் அக். 2ல் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடக்கும் மனித சங்கிலியில் திராவிடர் கழகம் பங்கேற்கும் என அதன் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தி, அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்படவிருக்கும் மனித சங்கிலி இயக்கத்தினை திராவிடர் கழகம் வரவேற்கிறது.

மதத்தை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடுத்தும் போக்குகளில் சங் பரிவார் சக்திகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இவற்றை அனுமதித்தால் அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டின் அமைதி நிலை பாதிக்கப்படும். இதனைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது. ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் காந்தியார் பிறந்த நாள் - கர்ம வீரர் காமராசர் நினைவு நாளான அக்டோபர் 2-ல் நடத்தப்படவிருக்கும் மனித சங்கிலியில் திராவிடர் கழகத் தோழர்கள் பெரிய அளவில் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: