×

கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் 4 பேர் மீது குண்டாஸ்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி மதி கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஜூலை 17ம் தேதி அந்த மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு சில அமைப்பினர் போராடியபோது கலவரமாக மாறியது. போலீஸ் வாகனம் மற்றும் பள்ளி பேருந்துகளை உடைத்து சேதப்படுத்தி தீ வைத்து எரிக்கப்பட்டன. இவ்வழக்கில் சின்னசேலம் போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் இதுவரை 400க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்துள்ளனர். அதில் சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.

இந்தநிலையில் சின்னசேலம் மாரியம்மமன் கோயில் தெருவை சேர்ந்த குமார் மகன் விஜய்(26) என்பவர் மீது பள்ளியை கண்டித்து கலவரம் ஏற்படுத்தும் விதமாக போஸ்டர் ஒட்டியும் கலவரத்திற்கு ஆட்களை திரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். சின்னசேலம் அடுத்த பங்காரத்தை சேர்ந்த ஜோதிவேல் மகன் ஜெயவேல்(22), கள்ளக்குறிச்சி அடுத்த மாமனந்தலை சேர்ந்த ஜாபர்அலி மகன் இப்ராஹீம்(26) ஆகிய இருவரும் தனியார் பள்ளியின் சொத்துகளை சேதப்படுத்தியதாகவும்  சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம்(56)  காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்து ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளியில் வந்தால் இதுபோன்றே பல சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால் இந்த 4 பேர்களையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பரிந்துரை செய்திருந்தார். இதன்படி விஜய், ஜெயவேல், இப்ராஹீம், ராமலிங்கம் ஆகிய 4 பேர்களையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். அதன்படி விஜய் உள்ளிட்ட மூன்று பேர்களையும் சின்னசேலம் போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ராமலிங்கத்தை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த பள்ளி கலவர வழக்கில் ஈடுபட்ட 8 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Kuntas ,Kaniamur , Guntas on 4 people in Kaniyamoor private school riot case
× RELATED கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9...