சேலத்தில் பரபரப்பு; வெள்ளைக்கல் கடத்துவதில் கோஷ்டி மோதல்; கல்வீச்சு: 4 பேர் காயம்; 3 பைக் எரிப்பு

சேலம்: சேலத்தில் வெள்ளைக்கல் கடத்துவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 4 பேர் காயம் அடைந்த நிலையில், 3 பைக் தீ வைத்து எரிக்கப்பட்டது. சேலம் மாமாங்கம் பகுதியில் கனிமவளம் நிறைந்த குவாரிகள் இருக்கிறது. இந்த குவாரிகளில் வெட்டப்படும் ஒரு டன் வெள்ளைக்கல் ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனை சிலர் தொடர்ந்து கடத்தி வருகின்றனர். காலை நேரத்தில் அங்கு கிடக்கும் வெள்ளைக்கற்களை எடுத்து மூட்டை கட்டி வைப்பார்கள். இரவு நேரத்தில் லாரியில் கடத்தி செல்கிறார்கள்.

இந்தநிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் ஊத்துக்கிணறு என்ற இடத்தில் டிப்பர் லாரியில் மாமாங்கத்தை சேர்ந்த பிரசாந்த், சீனிவாசன் ஆகியோர் வெள்ளைக்கற்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது நரசோதிப்பட்டியை சேர்ந்த கார்த்தி, அம்மாப்பாளையம் பூபதி மற்றும் சிலர் அங்கு சென்றனர். அவர்கள், ‘’அனுமதி இல்லாமல் வெள்ளைக்கற்களை ஏன் கடத்துகிறீர்கள்’’ என கேட்டுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அங்கு கிடந்த கற்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசினர். இதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. திடீரென பைக்குகளை தீ வைத்து எரித்தனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் சூரமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ரத்தகாயத்துடன் கிடந்த சீனிவாசனை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் இருதரப்பை சேர்ந்த சீனிவாசன், பிரசாத் மற்றும் கார்த்தி, பூபதி ஆகியோரும் காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பைக்குகள் எரிக்கப்பட்டது. 2 பைக்குகள்அடித்து நொறுக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘வெள்ளைக்கல் கடத்தல் தொடர்பாக கனிமவளத்துறை அதிகாரிகள் புகார் கொடுக்கும் போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருதரப்பினர் வெள்ளைக்கற்களை எடுத்துச்சென்றுள்ளனர். இன்னொரு தரப்பினர் மாமூல் கேட்டுள்ளனர். இதன்காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: