கண்டக்டர் கண்டித்ததால் மாநகர பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு: தப்பிய மாணவர்களுக்கு வலை

அம்பத்தூர்: வில்லிவாக்கத்தில் கல்வீசி மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு (தடம் எண்.48ஏ) மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணி அளவில் மாதவரத்தில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு மாநகர பேருந்து புறப்பட்டது.  பேருந்தை  டிரைவர்  சாய்பாலாஜி (44) என்பவர் ஓட்டிச்சென்றார். பேருந்தில் பயணிகள், மாணவர்கள் என 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

வில்லிவாக்கம் அருகே வந்தபோது, மாணவர்களில் சிலர் பாட்டு பாடி ஆட்டம் போட்டனர். மாணவர்களின் செயலால் பேருந்தில் இருந்த பயணிகளுக்கும், கண்டக்டர், டிரைவர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்களை கண்டக்டர் கண்டித்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த  மாணவர்கள்  கண்டக்டரை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் சில மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்குவதும், ஏறுவதுமாக இருந்துள்ளனர்.

அப்போது பேருந்தைவிட்டு கீழே இறங்கிய ஒரு மாணவர், கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தின்  பக்கவாட்டு கண்ணாடி மீது வீசிவிட்டு தப்பினார். இதில் கண்ணாடி உடைந்து சிதறியதால் பயணிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து டிரைவர் சாய்பாலாஜி  ஐசிஎப் போலீசில் புகார் செய்தார்.  புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த  மாணவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம்  மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: