2 லட்சம் செடிகளில் மலர்கள் பூக்கத் துவங்கியது; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை பார்வையிட 30ம்தேதி முதல் அனுமதி

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்ட 2 லட்சம் செடிகளில் மலர்கள் பூக்க துவங்கியதை தொடர்ந்து வரும் 30ம் தேதி முதல் மலர் அலங்காரங்களை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். கோடை காலத்தில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் கடை பிடிக்கப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் கடை பிடிக்கப்படுகிறது.இரண்டாம் சீசன் இம்மாதம் துவங்கிய நிலையில், தற்போது தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாடங்களில் ஆர்கானிக் என்ற வாசம் அடங்கிய மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. புல் மைதானத்தில் மலர் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யும் பணிகள் இரு நாட்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், மாடங்களிலும் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது.

பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 2 லட்சம் மலர் செடிகளிலும் மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன. அடுத்த வாரம் பள்ளி காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை விடுமுறை என தொடர் விடுமுறை வரும் நிலையில், ஊட்டியை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட வாய்ப்புள்ளது. மலர் அலங்கார பணிகள் முடிந்தவுடன் 30ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டிருந்த பெரிய புல் மைதானமும் அடுத்த வாரம் முதல் சுற்றுலா பயணிகள் செல்ல திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆயுத பூஜை விடுமுறையை கொண்டாட ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் மலர் அலங்காரங்களையும், செடிகளில் பூத்து குலுங்கும் வண்ண வண்ண மலர்களையும் கண்டு ரசிக்கலாம்.

Related Stories: